தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே எங்கு திரும்பினாலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எல்லா போராட்டங்களும் நடுவண், மாநில அரசுகளைக் கண்டித்து நடப்பவையாக உள்ளன. சல்லிக்கட்டு போராட்டத்தைப் போல, தற்போது நீட் தேர்வை கண்டித்து போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. இந்தப் போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்தான் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சட்டம் ஒழுங்கு சீர் கெடும் நோக்கோடு நடைபெற்று வரும் போராட்டம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்று மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீர்ப்பு வந்த நேரத்தில், திருச்சியில் திமுக பொதுக் கூட்டம் நடந்தது. இதனால் பொதுக்கூட்டம் நடைபெறுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், பொதுக்கூட்டத்துக்கு காவல்துறையினா; அனுமதி மறுத்தனர். அதையும் மீறி பொதுக் கூட்டம் நடந்தது. தினகரன் ஆர்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் அந்தப் போராட்டத்தை ரத்து செய்தார். உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்புகளை காவல்துறையினர் தவறாக பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த தீர்ப்பு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உச்ச அறங்கூற்றுமன்றம் அளித்த உத்தரவு தொடர்பாக சென்னை உயர் அறங்கூற்று மன்ற ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் அரிபரந்தாமன் கருத்து: தமிழகத்தில் நீட் தேர்வு விசயத்தில் அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவி அனிதா இறந்த பிறகும் எந்த வன்முறையோ, விரும்பத்தகாத செயலோ தமிழகத்தில் நடைபெறவில்லை. அமைதியாக போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் உச்ச அறங்கூற்று மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இது போன்ற தீர்ப்பு தேவையற்றது. எந்த வகையிலும் வன்முறை நடக்காத சூழலில் விளம்பர நோக்கத்திற்காக போடப்பட்ட ஒரு பொது நல மனுவை அவசர அவசரமாக விசாரித்து இது போன்ற தேவையற்ற உத்தரவை உச்ச அறங்கூற்றுமன்றம் பிறப்பித்துள்ளது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு இல்லாத வகையில் போராட்டங்களை நடத்தலாம் என்றும் அமைதியான வழியிலான ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்துவதில் தவறு இல்லை என்றும் உச்ச அறங்கூற்று மன்றம் கூறியுள்ளது. வன்முறையோ, சட்டம் ஒழுங்கு பிரச்னையோ இல்லாத போது இது போன்ற உத்தரவு தேவைதானா? ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவன் கண்ணையா குமார் விசயத்தில் உச்ச அறங்கூற்று மன்றத்தின் 200 அடி தூரத்தில் மூத்த வழக்கறிஞர்களும் அங்கிருந்த பலரும் தாக்கப்பட்ட நேரத்தில் உச்ச அறங்கூற்று மன்றம் வாய் மூடி மவுனம் காத்தது. குஜராத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீது நடந்த தாக்குதலின் போது, உச்ச அறங்கூற்று மன்றம் வாய் திறக்கவில்லை. சாமியார் ராம் ரகீம் செய்த தவறுக்காக அவருக்கு தண்டனையை வழங்க அறங்கூற்றுவர் விமானத்தில் பறந்து சென்றதையும், சாமியார் ஆதரவாளர்களால் 30 அப்பாவிகள் கொல்லப்பட்ட போதும் உச்ச அறங்கூற்று மன்றம் எங்கே சென்றது. தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து தான் போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டம் உச்ச அறங்கூற்று மன்றத்திற்கு எதிரானது அல்ல. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு குடிஅரசு தலைவரின் ஒப்புதலை வழங்க கோரி தான் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால், உச்ச அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்கள் தங்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்த படுகிறதோ என்றும் தங்களின் தீர்ப்புக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறதோ என்றும் தவறான சந்தேகத்தின் அடிப்படையில் இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். இது போன்ற உத்தரவுகள் வருவது கூட்டாட்சி தத்துவம் என்பதை முற்றிலும் சிதைத்து விடுகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் கூட்டாட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அபரிமிதமான உரிமையை இது போன்ற தீர்ப்புகள் சிதைப்பது போல் உள்ளன. உச்ச அறங்கூற்று மன்றத்தின் இந்தத் தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராகவும், மீறுவதாகவும் உள்ளது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு அரசியலமைப்பு சட்டத்தில் தரப்பட்டுள்ள அடிப்படை உரிமையின் அடிப்படையில் போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது இது போன்ற தேவையற்ற உத்தரவுகளை திணிப்பது தேவையற்ற நடைமுறையாகும். இந்த உத்தரவின் அடிப்படையில் அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிப்பதற்கோ தங்களின் உரிமைகளை நிலைநாட்ட குரல் கொடுப்பதற்கோ எந்த தடையும் இல்லை. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தான் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. திமுக தலைமையில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் கலந்து கொண்டன. அந்த கூட்டத்தில் எந்த வன்முறையோ எந்த விதிமீறலோ நடக்கவில்லை. இதே போல் தான் வரும் 13ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டமும் இருக்கும். உச்ச அறங்கூற்று மன்றத்தின் தீர்ப்பு எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளது என்று தான் கருத தோன்றுகிறது. ஆனால், எதுவுமே நடக்காமல் எந்தச் சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் உச்ச அறங்கூற்று மன்றம் இது போன்று மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் உத்தரவுகள் பிறப்பிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். அப்போது தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் நமக்கு தரப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்தின் பொருள் விளங்கும். அனிதா மரணத்திற்கு பிறகு மாணவர்களும் பொது மக்களும் தங்கள் எதிர்ப்பை அரசின் செயல்பாடுகளுக்கு இடைஞ்சல் தராமல் வெளிகாட்டி வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையான நீட் தேர்வு ரத்து சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை நடுவண் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுவதை விட்டு விட்டு நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவையற்ற பொது நல வழக்குகளையும் விளம்பரத்திற்காக தொடரப்படும் வழக்குகளையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால், இந்த நீட் விசயத்தில் விளம்பரத்திற்காக போடப்பட்ட பொது நல மனு விசாரணைக்காக ஏற்று கொள்ளப்பட்டு அதன் மீது உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவு பிறப்பித்தது துரதிஷ்டவசமானது. இது போன்ற நிகழ்வுகள் வரும் காலத்தில் நடைபெற கூடாது என்பது என்னுடைய கருத்து.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



