ஊழல் நடைபெறுவதை அரசு தடுக்காவிட்டால், பொதுமக்கள்
வரி செலுத்தாமல், ஒத்துழையாமை இயக்கம் நடத்தவேண்டும். என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி
பரபரப்பான கருத்தைத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில்
தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவுகளில் ஒன்றான ‘மதாங்க்’
சமூக மக்களின் நன்மைக்காக செயல்பட்டு வருவதாக கருதப்படும் ‘லோக்
அதிகார் அன்னாபாவு சாத்தே விகாஸ் மகாமண்டல் அமைப்பில் 385 கோடி மோசடி நடந்திருப்பதாக
குற்றம்சாட்டி மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி அருண் சவுத்ரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது
சமூகத்தில் பல துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாக நீதிபதி கவலையும் அதிருப்தியும்
தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: ஊழல் என்பது இப்போது மிக கொடூர அசுரனாக வளர்ந்து
விட்டது. அரசு துறைகளில் எங்கு போனாலும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் போக்கு காணப்படுகிறது.
இன்னும் எத்தனை காலம் தான் மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு லஞ்சம் தர வேண்டுமோ?
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க உறுதியான
நடவடிக்கை வேண்டும். இந்த விஷயத்தில் அரசு தான் திடமாக இருக்க வேண்டும். உறுதியான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும். லஞ்ச, ஊழல் வளரவே கூடாது. இதற்கு எந்த நிலையிலும் உதவும் வகையில் யாரும் செயல்பட
அனுமதிக்க கூடாது. ஊழலை ஒழிக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனால் தொடர்ந்து
பாதிக்கப்படுவது சாமான்ய மக்கள் தான். அரசுக்கு வரிகளையும் தந்து, குடிநீர், கழிவுநீர்
அகற்றல் போன்ற அடிப்படை தேவைகளைத் தீர்த்து கொள்ள லஞ்சமும் தர வேண்டும் துர்ப்பாக்கிய
நிலை தொடர அனுதிப்பது எந்த வகையில் நியாயம்? லஞ்சத்துக்கு எதிரான கடும் உறுதியான நடவடிக்கை எடுக்காத வரை,
பொதுமக்கள் இனி அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமல் ஒத்துழையாமை இயக்கம் நடத்த
வேண்டும். ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் ஓரணியில் திரளவேண்டிய
முக்கியமான காலகட்டம் இது. நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் இந்த ஊழல் அசுரனை ஒழிக்கமுடியும்.
இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



