30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகமெங்கும் வாழும் இந்திய, துறைசார் வேலையாட்கள், அதிக அனுபவமுள்ள திறமைமிக்க வேலையாட்கள், ஊழியர்கள், மற்றும் அனுபவமற்ற வேலையாட்கள் மற்றும் ஊழியர்கள் மூலமாக கடந்த ஆண்டு இந்தியா பெற்ற அந்நிய செலவாணியின் மதிப்பு சுமார் 3,93,356 கோடி ரூபாய்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் கடந்த ஆண்டிற்கான அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவலின் படி, கடந்த ஆண்டு மட்டும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 2,30,900 கோடி ரூபாய் பணத்தினை தங்களின் வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறது கேரளா. 19 விழுக்காடு அன்னிய செலவாணி ஈட்டித் தந்துள்ளது கேரளா. கடந்த ஆண்டு வெளிநாடு வாழ் ஊழியர்களால் தாய் நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணத்தில் அடிப்படையில் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பில் முதல் இடம் பிடித்திருந்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை அடுத்து சீனா இரண்டாம் இடம் பிடித்தது. கடந்த ஆண்டு பெறப்பட்ட அந்நிய செலவாணியின் அடிப்படையில் இந்தியர்கள் கீழ்கண்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் பணம் அனுப்பியுள்ளனர். அமீரகம், அமெரிக்கா, சௌதி அரேபியா, கத்தார், குவைத், இங்கிலாந்து, ஓமன் போன்ற நாடுகளில் இருந்து தான் இந்தியாவின் 90 விழுக்காடு அந்நிய செலவாணி கடந்த ஆண்டு பெறப்பட்டது. ஆனால், வடவர்கள் மொழியான ஹிந்தி மொழி வளர்ச்சிக்கு மட்டுமே நடுவண் அரசு பெருந்தொகை செலவிட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகரம் மாசு நிறைந்த டெல்லி. நடுவண் அமைச்சகத்தின் அதிகப்படியான ஊதியம் பெறுபவர்கள் வட மாநிலத்தவர்களே. இந்தியாவின் அனைத்து நிருவாக அலுவலகங்களும் வட இந்திய மாநிலங்களில். முக்கி முக்கி இடித்தவளுக்கு மூனு கொலுக்கட்டை, எட்டி எட்டி பார்த்தவளுக்கு ஏழு கொழுக்கட்டை என்கிற பழமொழி கதைதான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,973.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



