பிச்சைக்காரர்கள் கூட பணஅட்டை தேய்ப்புக் கருவி வைத்திருக்கும் போது நாம் அனைவரும் ஏன் எண்ணிம பரிவர்த்தனைக்கு மாறக் கூடாது என மோடியின் பேச்சால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற பாஜ கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராகவும், அதை ஆதரிப்போரைக் கண்டித்தும் மிகவும் ஆவேசமாக பேசினார். கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால் நாட்டு மக்கள் அனைவரும் எண்ணிம பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது அவர் கட்செவிஅஞ்சல் செயலியில் ஓடும் காணொளி ஒன்றைச் சுட்டிக்காட்டி, இந்த காணொளியைப் பாருங்கள், இந்த காணொளி எத்தனை தூரத்திற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. இருந்த போதிலும் இதில் பிச்சை எடுப்பவரிடம் ஒருவர் ‘என்னிடம் தருவதற்கு சில்லறை இல்லையே’ என்கிறார். உடனே பிச்சைக்காரர், ‘கவலையே படாதீர்கள்’ என்று கூறி தன்னுடைய பையில் இருந்து ஒரு பணஅட்டை தேய்ப்புக் கருவியை எடுத்துக் காட்டி, ‘உங்க பணஅட்டையைத் தேயுங்க’ என்கிறார். இதை சுட்டி காட்டிய மோடி, இப்படி பிச்சைக்காரர்களே பணஅட்டை தேய்ப்புக் கருவி; வைத்துக் கொள்ளும்போது நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் ரொக்கமில்லா எண்ணிம பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்றார். இதை கேட்டதும் கூட்டத்தில் மிகப் பெரிய அளவில் கலகலப்பு ஏற்பட்டது, கூட்டத்தினர் மோடியின் பேச்சை ரசித்து அனைவரும் சிரித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



