ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரப்பர் குண்டு பாய்ந்த 12 வயது சிறுவன் பலியானான். இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகே உள்ள சையத்போரா பகுதியை சேர்ந்தவர் ஜூனையத் அகமத் (12). நேற்று முன்தினம் மாலை அந்தப் பகுதியில் கலவரம் வெடித்தது. கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் நுழைவுவாயிலில் நின்றிருந்த ஜூனையத் அகமத் மீது ரப்பர் குண்டுகள் பாய்ந்தன. இதில் அவனது தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயமேற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான். பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூட்டில் ஜூனையத் அகமத் உயிரிழந்ததற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 100க்கும் மேற்பட்டோர் சாலைகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூனைத் இறுதி சடங்கு நடைபெறும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



