Show all

வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவேன் என்ற வாக்குறுதியோடு ஆட்சியேற்ற மோடியின் ஆட்சியில் ஆட்குறைப்பு

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளக்கும் இந்திய மாநிலவங்கி சுமார் 6,622 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தப் பணிநீக்கம் அனைத்தையும் கட்டாயப்பணி ஓய்வு மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் எனக் கணக்குக்காட்டியுள்ளது.

இந்திய வங்கிகள் அதிகளவிலான எண்ணிமச் சேவைகளைப் பயன்படுத்த தெடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது.

மேலும் ஊழியர்கள் வெளியேற்றம் குறித்து இந்திய மாநில வங்கியின் நிர்வாகத் தலைவர் ராஜ்னிஷ் குமார் கூறுகையில், அடுத்தச் சில ஆண்டுகளில் வங்கித் துறையில் ஊழியர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறையும். இந்திய மாநிலவங்கியில் மட்டும் அடுத்த 2 ஆண்டுகளில் 10 விழுக்காடு வேலைவாய்ப்புகள் குறைக்கப்படலாம் எனத் தெரிவித்தார்.

இந்திய மாநில வங்கி தானியங்கல் கிளை வங்கிகள் இணைப்பிற்குப் பின் இந்திய மாநில வங்கியில் அதிகளவிலான எண்ணிம சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முக்கியப் பணிகள் அனைத்தும் தற்போது தானியங்கல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் தகவல்தொழில் நுட்பம், விவசாயம் துறைக்கு அடுத்ததாக தானியங்கல் பாதிப்பு வங்கித்துறையிலும் தொடங்கியுள்ளது.

வங்கித்துறையில் வேலைவாய்ப்பு மிகவும் பாதுகாப்பானது என்ற ஒரே காரணத்திற்காக இளைஞர்கள் அனைவரும் வங்கித்துறையை நோக்கிய பயணம் செய்யத் தொடங்கியுள்ள இன்றைய நிலையில், வங்கிகள் தானியங்கல் காரணமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.

பொதுத்துறை வங்கியை விடவும் தனியார் வங்கிகளில் தான் அதிகளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தனியார் வங்கிகளில் பணிநீக்கத்தின் அளவு சற்று அதிகமாகவே உள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முதன்முதலாகத் துவங்கியது எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் தான். இதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி தற்போது இந்திய மாநிலவங்கி வரை வந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.