Show all

இந்தியாவில் கொரோனா நுண்ணுயிரித்தொற்று பாதிப்பு! தேசிய பேரிடராக நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா நுண்ணுயிரித் தொற்றைப் பெரும் தொற்று நோய் என உலக நலங்குத்துறை அமைப்பு அறிவித்து உள்ள நிலையில், அதனை தேசிய பேரிடராக இந்திய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா நுண்ணுயிரி 140க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.  கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436ஐ தாண்டியுள்ளது.  உலகெங்கிலும் 140 நாடுகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 810 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து உள்ளது.  67 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் உள்பட 87 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்த 87 பேருடனும் தொடர்புடைய 4 ஆயிரம் பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா நுண்ணுயிரித் தொற்றைப் பெரும் தொற்று நோய் என உலக நலங்குத்துறை அமைப்பு அறிவித்து உள்ள நிலையில், அதனை தேசிய பேரிடராக இந்திய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது. தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தேசிய பேரிடராக நடுவண் அரசு அறிவித்து உள்ளது.  

இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே நிர்ணயிக்கும்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தேசிய மருத்துவ அமைப்பு வழங்கும் என நடுவண் அரசு அறிவித்துள்ளது.  இதேபோன்று கொரோனாவை பேரிடராக கவனத்தில் கொண்டு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கொரோனாவிற்கு பலியான குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.