12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பக்கத்து வீட்டுக்காரி பால்மாடுவைத்து, பால்கறந்து, தயிர் போட்டு, வெண்ணெய் எடுத்து பலஆயிரம் சம்பாதிக்கிறாள் என்று நம்ம வீட்டில் மோடிஅவர்கள்- கடைந்த மோரில் வெண்ணெய் எடுக்கும் கதைதாம் ஐட்ரோ கார்பன் திட்டங்கள். அரபு நாடுகளில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் போன்ற மிகப் பெரிய உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து அழிந்தன. அதனால் அங்கே தோண்ட தோண்ட பெட்ரோல், டீசல் என்று ஐட்ரோகார்பன் வகைகள் கிடைப்பது இயல்பு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், பலஇலட்சம் ஆண்டுகளாக மனிதர்களும் சிறுவகை உயிரினங்களுமே வாழ்ந்திருந்தன. இங்கே தோண்டினால் முதல் அடுக்கில் வரலாற்றுச் சின்னங்களும், இரண்டாவது அடுக்கில் வேளாண்மைக்கான நீராதாரங்களும் கிடைக்கும். மூன்றாவது அடுக்கில்தாம் கொஞ்சமாக ஐட்ரோகார்பன் வகைகள் கிடைக்கும். இங்கே எடுக்கப் படுகிற ஒவ்வொரு துளி பெட்ரோலுக்கும், வரலாற்று ஆதாரங்களையும், நீராதாரங்களையும் விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது உண்மை! அதனாலேயே தமிழகத்து அறிஞர் பெருமக்களும், இயற்கை ஆர்வலர்களும், தமிழகத்தில் ஐட்ரோ கார்பன் திட்டங்களுக்கு கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதை காதில் வாங்காது மோடி அரசு அந்த வேலைகளிலேயே தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுப்பது தொடர்பாக வரும் திங்கட் கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. ஐட்ரோகார்பன் எடுப்பதற்காக நில ஆய்வு செய்யப்படாத இடங்களிலும் நடுவண் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை ஒன்பது மாதத்திற்கு முன்பு ஒப்பந்தம் கோரியிருந்தது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் அங்கு புதிதாக நில ஆய்வை நடத்திய பின்னர், ஐட்ரோ கார்பன் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரி வாயுவை எடுக்கவுள்ளனர். இந்த ஒப்பந்தங்கள் நெடுவாசலை விடப் பல மடங்கு பெரிதானவை. நாடு முழுவதிலும் மொத்தம் 55 இடங்களுக்காக இவை விடப்பட்டிருந்தன. இதில், தூத்துக் குடியின் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் 41 இடங்களை எடுத்துள்ளது. இவற்றில் தமிழகத்தில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், வேதாந்தாவுக்கு இரண்டும், நடுவண் அரசின் பொது நிறுவனமான எரிவாயுகழகத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. இதற்கான ஒப்பந்தமும் மற்றவை களுடன் சேர்த்து வரும் திங்கட் கிழமையன்று கையெழுத்தாக உள்ளது. இதற்காக, டெல்லியில் உள்ள லீமெர்டியன் சொகுசு உணவகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பங்கேற்கவுள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, நில ஆய்வுக்கு முன்பாக நடுவண் அரசிடம் 25 மற்றும் தமிழக அரசிடம் 15 உரிமங்களை இரண்டு நிறுவனங்களும் பெற வேண்டி உள்ளது. இந்த உரிமங்களைப் பெற்ற பின், 3 இடங்களிலும் பணிகள் தொடங்கப்படும். வேதாந்தாவின் இரண்டு இடங்கள் தஞ்சை கழிமுகப் பகுதிகளின் மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. ஆய்வுக்கு பிறகே, அதன் குறிப்பிட்ட இடம் தெரியவரும். ஆனால், இந்திய எரிவாயுக் கழகத்திற்கு கிடைத்த ஒரு இடம் குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த 3 இடங்களிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு ஐட்ரோகார்பன் எடுக்கப் படும். இங்கு எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட் களின் அளவுக்கு ஏற்றபடி நடுவண் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை ஏற்கெனவே கட்டணம் நிர்ணயித்துள்ளது. எனவே, அந்த இடங்களில் கிடைக்கும் அளவுக்கு ஏற்ப, வேதாந்தா மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை தனது கட்டணங்களை நடுவண் அரசிடம் செலுத்த வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,924.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



