24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிரான நடுவண் அரசின் மனு மீது உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. உச்சஅறங்கூற்றுமன்றத்தில், அறங்கூற்றுவர்கள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடுவண் அரசின் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அறங்கூற்றுவர்கள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக நடுவண் அரசு பதிகை செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், எனவே அந்த மனுவின் மீதான விசாரணையை முடித்து வைப்பதாகவும் கூறினார்கள். அத்துடன், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து, அதை மாநில ஆளுநரின்; பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கூறினார்கள். பேரறிவாளன் அளித்த மனுவின் அடிப்படையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் நகல் இன்று உச்ச அறங்கூற்றுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், பிரிவு 161ஐ பயன்படுத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச அறங்கூற்றுமன்றம் குறிப்பிட்டுள்ளது. அரசியல் சாசனம் 161ன் கீழ் விடுதலை செய்யும்படி மனு அளித்திருந்தார் பேரறிவாளன். அதன்படி, விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு பேரறிவாளன் அளித்த மனு செல்லும் என்றும், மனுவை ஏற்று, தமிழக ஆளுநர் சுதந்திரமாக சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் உச்சஅறங்கூற்றுமன்றம் கூறியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,905.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



