19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஹிந்து வலதுசாரிகளின் தீவிரவாதம் குறித்து கட்டுரை எழுதிய கமல் ஹாஸனுக்கு எதிராக வாரணாசி அறங்கூற்றுமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு வரும் 6,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119; (22.11.2017) விசாரணைக்கு வருகிறது. தமிழ் வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன், இந்து வலதுசாரியினர் வன்முறையில் ஈடுபட தொடங்கி விட்டதாகவும், எங்கே ஓர் ஹிந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். கமல் ஹாசன் கருத்துக்கு பாஜக, சிவசேனா மற்றும் சங் பரிவார் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமலுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, கமல்ஹாசன் மீது உத்தரபிரதேசத்தில் பனாரஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். கமலேஷ் சந்திர திரிபாதி என்ற வழக்கறிஞர், வாரணாசியில் உள்ள கூடுதல் தலைமை அறங்கூற்றுமன்றத்தில் முந்தாநாள் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், கமல் ஹாசன் தெரிவித்த கருத்துகள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி இருப்பதாகவும், எனவே அவர் இதுபோன்ற கருத்துகளை இனிமேல் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இந்த மனு மீது வருகிற 6,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119; (22.11.2017) விசாரணை நடத்த அறங்கூற்றுமன்றம் முடிவு செய்துள்ளது. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதாக கமலுக்கான அரசியல்நீட்தேர்வு தொடங்கி விட்டது. இனி முடிவு அவர் தாக்கு பிடிக்கும் சக்தியை பொறுத்தது!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



