Show all

மும்பை ஆளுநர் ராஜ்பவன் வளாகத்திற்குள் 13 அறைகளுடன் பாதாளச் சுரங்கம்

மும்பையில் ஆளுநர் வசிக்கும் ராஜ்பவன் வளாகத்திற்குள் 13 அறைகளுடன் பாதாள சுரங்கம் இருப்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்டுபிடித்திருக்கிறார். மூடிக்கிடந்த சுரங்கப்பாதையை ஊழியர்களைக் கொண்டு அவர் திறந்து பார்த்த போது, இந்த பாதாள சுரங்கம் தென்பட்டது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் ஆளுநர் குடியிருக்கும் ராஜ்பவன் உள்ளது. இந்த ராஜ்பவன் வளாகத்திற்குள் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. நாடு சுதந்திரமடைந்த போதிலிருந்தே இந்தச் சுரங்கப்பாதை மூடப்பட்டு கிடந்தது. அதை யாரும் திறந்து பார்க்க முயற்சிக்கவில்லை. தற்போதைய ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் அந்தச் சுரங்கப்பாதை குறித்து ஊழியர்கள் சாதாரணமாக தெரிவித்திருக்கின்றனர். அவருக்கு அதை திறந்து பார்க்க ஆசை ஏற்பட்டது. இந்நிலையில், ஆளுநர் நேற்று பொதுப்பணித் துறை அதிகாரிகளை வரவழைத்து அந்தச் சுரங்கப்பாதையைத் திறக்க உத்தரவிட்டார். அதிகாரிகளும் உடனடியாக ஊழியர்களை வரவழைத்து பாழடைந்த சுரங்கப்பாதை சுவர்களை இடித்து திறந்து விட்டனர். அதன்பின், ஆளுநர் தனது மனைவி வினோதாவுடன் அந்தச் சுரங்கப்பாதைக்குள் சென்றார். அதிகாரிகளும், ஊழியர்களும் பின்தொடர்ந்து சென்றனர். சுரங்கப்பாதைக்குள் சென்றால், அங்கு ஒரு பெரிய பங்களாவே இருப்பது கண்டு அனைவரும் வியப்படைந்தனர். சுமார் 5 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்தப் பாதாள சுரங்கத்திற்குள் சிறியதும், பெரியதுமாக மொத்தம் 13 அறைகள் இருந்தன. ஒரு காலத்தில் அவற்றில் ஆயுதங்களைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள் என தெரிந்தது. அதை குறிக்கும் வகையில் அறைகளுக்கு பெயர் எழுதப்பட்டிருந்தது. சுமார் 20 அடி உயரம் கொண்ட சுரங்கப்பாதை சுமார் 150 அடி நீளத்திற்கு செல்கிறது. அதன் இருபுறமும் அறைகள் இருப்பதுடன், சூரிய ஒளி மூலம் வெளிச்சம் மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிகள் உள்பட வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பாதாள அறைகளைப் பார்த்து வியந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் இது பற்றி முதல்வர் பட்நாவிசுக்கு தெரிவித்தார். இதையடுத்து, ராஜ்பவனுக்கு வந்த முதல்வர் பட்நாவிஸ், பாதாள சுரங்கத்தைப் பார்த்தார். தற்போது மகாராஷ்டிராவில் இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பாதாளச் சுரங்கம் பற்றி குடியரசுத்தலைவருக்கும் ஆளுநர் தகவல் தெரிவித்திருக்கிறார். புhதாளச் சுரங்கத்தைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் விரைவில் பார்வையிட உள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இந்த ராஜ்பவன் வளாகம், அரசு இல்லம் என்ற பெயரில் ஆளுநர்கள் தங்கும் மாளிகையாகவே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.