இலங்கையில் ஏற்பட்டுள்ள
வறட்சியை சமாளிக்க இந்தியா சார்பில் மூன்று தண்ணீர் வண்டிகள், 100 மெட்ரிக் டன் அரிசி
ஆகியவை நன்கொடையாக வழங்கப்படவுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புக்கு மூன்று நாள் அரசு
முறைப் பயணமாக கடந்த சனிக்கிழமை (பிப். 18) இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெய்சங்கர்
சென்றார். இந்தச் சந்திப்பின் போது, இலங்கை அதிபர் மைத்ரிபால
சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள
சமரவீரா ஆகியோரை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தொடர்பான விவரத்தை
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். இது குறித்து இந்திய தூதரக உயரதிகாரி கூறியதாவது: கொழும்பில் மூன்று
நாள்கள் அரசு முறைப் பயணமாக வந்த ஜெய்சங்கர், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இலங்கை வளர்ச்சி உத்திகள்
மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் மாலிக் சமரவிக்கிரமா, அந்நாட்டு வெளியுறவுத்
துறை செயலாளர் எசலா வீரகோன் உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இரு தரப்பு நல்லுறவுகள், இலங்கையில் இந்திய உதவியுடன்
செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து
அதிபர் மைத்திரிபால சிறீசேனா, இலங்கை அமைச்சர்கள் ஆகியோருடன் ஜெய்சங்கர் விரிவாக ஆலோசனை
நடத்தினார். அப்போது, இலங்கையில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள
பகுதிகளின் உடனடித் தேவைக்காக 100 மெட்ரிக் டன் அரிசி, மூன்று தண்ணீர் வண்டிகள் நன்கொடையாக
வழங்கப்படும் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கை எதிர்கொண்டு வரும் வறட்சியை சமாளிக்க எதிர்காலத்தில்
தேவைப்படும் அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்க தயாராக உள்ளது என்றும் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.
இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளராக ஜெய்சங்கர் பொறுப்பேற்ற பிறகு இலங்கைக்கு அவர்
மேற்கொண்ட இரண்டாவது சந்திப்பு இதுவாகும். இலங்கையில் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட இந்திய
வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கரிடம் அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
இரா.சம்பந்தன் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக ஜெய்சங்கருடன் சம்பந்தன் தலைமையிலான
தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, இலங்கையில் போரின்
போது இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்கள் வசித்து வந்த தாயகப் பகுதிக்கு மீள்குடியேற்றம்
செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு முழு ஈடுபாடு காட்டவில்லை என்றும் இந்திய உதவியுடன்
செயல்படுத்தப்படும் மீள்கட்டமைப்பு திட்டங்களின் பலன்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு
முறையாகச் சென்றடைவதில்லை என்றும் தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் கூறினர். போரின் போது அரசியல் கைதிகள் என அறிவித்து சிறைகளில்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு
இலங்கை அரசு ஒப்படைக்கவில்லை என்றும் தமிழ் தலைவர்கள் முறையிட்டனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



