பெயர் வெளியிட விரும்பாத நபர்கள் மூலம் தலையாய
அரசியல் கட்சிகள், ரூ.7,833 கோடி நன்கொடை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில்
அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.3,323 கோடி நன்கொடை கிடைத்திருப்பதாகவும், அதற்கு
அடுத்தபடியாக பாஜகவுக்கு ரூ.2,125 கோடி கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது. அதேபோன்று மாநில அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை
சமாஜவாதி கட்சிக்கு அறியப்படாத நபர்கள் வாயிலாக ரூ.766 கோடி நன்கொடையாகக் கிடைத்திருப்பதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பாக
தில்லியைச் சேர்ந்த மக்களாட்சி சீர்திருத்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. கடந்த
2004-ஆம் ஆண்டு முதல் 2015 வரை அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை அறிக்கையாக
அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: மேற்கண்ட 11 ஆண்டுகளில் அதிகபட்சமாக காங்கிரஸ்
கட்சிக்கு ரூ.3,982 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. அதில் பெயர் வெளியிட விரும்பாத நபர்கள்
வாயிலாக ரூ.3,323 கோடியை அக்கட்சி பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பாஜக உள்ளது.
அக்கட்சிக்கு மொத்தம் ரூ.3,272 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. அதில் அறியப்படாத நபர்கள்
மூலம் ரூ.2,125 கோடி பெறப்பட்டுள்ளது. மாநில அளவில் திமுகவுக்கு மொத்தம் ரூ.203 கோடியும்,
அதிமுகவுக்கு ரூ.165 கோடியும் நன்கொடை கிடைத்துள்ளது. சமாஜவாதி கட்சி அதிகபட்சமாக ரூ.819
கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது. மொத்தத்தில், அரசியல்
கட்சிகளுக்குக் கிடைக்கும் வருவாயில் பெயர் வெளியிட விரும்பாத நபர்கள் வாயிலாகக் கிடைத்த
நன்கொடை 69 விழுக்காடு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



