Show all

நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் ரூ.1 கோடி நிதியுதவி! மழையால் வீழ்ந்த கேரளமக்களை மீட்டெடுக்கும் இந்திய மக்களின் பாசவலை

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்தநிலையில், வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு, உச்சஅறங்கூற்றுமன்ற நடுவர்கள் குரியன் ஜோசப் மற்றும் கே.எம்.ஜோசப் உள்பட வழக்கறிஞர்கள் பலர் அறங்கூற்றுமன்ற வளாகத்தில் நிவாரண நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ரூ.1 கோடியை கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதியில் செலுத்தினார். அவரது மகனான உச்ச அறங்கூற்றுமன்ற மூத்த வழக்கறிஞர் கிருஷ்னன் வேணுகோபால் ரூ.15 லட்சமும், மற்ற மூத்த வழக்கறிஞர்களான ஜெய்தீப் சிங் மற்றும் சந்தர் உதய் சிங் ஆகியோர் தலா ரூ.5 லட்சமும் நிவாரண நிதியாக அளித்தனர். 

மேலும், உச்சஅறங்கூற்றுமன்ற பார் கவுன்சில் சார்பாக அதன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் கேரளாவிற்கு வழங்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,884.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.