Show all

ப.சிதம்பரம் கைது! வடக்கும் தடம்மாறியிருக்கிறது தமிழக அரசியல் பாணிக்கு

ஐ.என்.எக்ஸ் ஊடக வழக்கில் ப.சிதம்பரத்தை 24 மணி நேரத்துக்கும் மேலான, (சுவர் ஏறி குதித்தல் போன்ற) கடும் முயற்சிக்குப் பிறகு தில்லியில் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ப.சிதம்பரம் கைது நடவடிக்கை தமிழக காங்கிரஸ் கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். அதே சமயம் இது பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் தலைமையும் கடுமையாக கண்டித்துள்ளது. 

தமிழகத்தில் ஆட்சி மாறியதும், ஆண்ட கட்சியின் தவறுகள் தோலுரித்துக் காட்டப்படுவதும், பலிவாங்கப் படுவதும் நீண்டகால அரசியல் பாணியாகப் பின்பற்றப் பட்டு வருகிறது. அது சரியா தவறா என்பதை விட கட்சிகள் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு நல்லாட்சி தருவதற்கு பயன்படுவதாகவே அறிய முடிகிறது.

நடுவண் அரசில் கடந்த எழுபத்தி மூன்று ஆண்டுகளாகவே இந்தப் பாணி பின்பற்றப் படாமையினாலேயே கட்சிகளுக்கு இடையே ஆரோக்கியமான பகை, கட்சிகளுக்கு வலுவான அடித்தளம் இல்லாமல், ஹிந்தி, ஹிந்துத்துவா, கார்ப்பரேட்டுகள் மட்டும் வளர்க்கப்பட்டு வந்தன. 

ஹிந்தி, ஹிந்துத்துவா, கார்ப்பரேட்டுகள் வளர்ச்சி என்கிற ஒரே வேலையை காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் தொடர்ந்து செய்து வந்த நிலையில், ஹிந்தி, ஹிந்துத்துவா, கார்ப்பரேட்டுகள் வளர்ச்சி என்பதையே கொள்கையாக கொண்ட பாஜக இந்தியாவின் தனிப்பெரும் கட்சியாக வானளாவ வளர்ந்து விட்டது. பாஜகவின் தவறுகளைத் தோலுரிக்க முயலாமல், அதே வேலையை ஒப்புக்கு செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி கட்டெறும்பாக தேய்ந்து போனது.

இந்த நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் கருத்துப் பரப்புதலில், மிகச்சரியாக காய் நகர்த்தி, ராபேல் விமான ஊழலை வெளிக் கொணர்ந்து, பாஜகவின் கார்ப்பரேட் அரசியலை கடுமையாகச் சாடினார் இராகுல்காந்தி. காங்கிரஸ் வென்று விடுமோ என்று கூட அரசியல் வல்லுனர்கள் கருதினார்கள். இராகுல் காந்தியிடம் அவ்வளவு நெருப்பு. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கற்பூரமாகப் பற்றிக் கொண்டிருக்க வேண்டாம்? கரித்துண்டாகவாவது கனன்றிருக்கலாம்; வாழைமட்டையாகத்தான் தேர்தலை முன்னெடுத்தார்கள். பாவம் இராகுல்.

இந்த நிலையில் பாஜக தமிழக அரசியல் பாணியில், காங்கிரஸ் ஆண்ட கட்சி என்ற வகையிலும், நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவே தோற்று விடுவோமோ என்று கருதும் அளவிற்கு எகிறி அடித்த இராகுலை பலிவாங்கும் முகமாகவும் ப.சிதம்பரத்தைக் கைது செய்து தனது ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது பாஜக. இது காங்கிரசுக்கு உண்மையில் தளர்ச்சி இல்லை; வளர்ச்சியே. எருமைமாடு போல அசையாமல் இருந்து கொண்டிருந்த காங்கிரசுக்கு இது நல்ல அதிர்ச்சி வைத்தியமே.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,252.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.