Show all

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்!

நாட்டின் மிகப்பெரிய மாநிலம், நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு வல்லமை கொண்ட 80 நாடாளுமன்றத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்திரபிரதேசம்.

     தேர்தல் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.

403 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. பரபரப்பான தேர்தல் கருத்துப் பரப்புதல் சூடு மறைந்து, மாநிலத்தில் அமைதி.

     அடுத்த யார் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள் என்று அந்த மாநிலம் மட்டுமல்ல நாடே ஆவலோடு காத்திருக்கிறது. இது ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முடிவாக இருக்கும்.

     உத்திரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்திரகாண்ட் மற்றும் மணிப்பூர் என ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

     வருகிற 11ம் தேதி (சனிக்கிழமை) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. சனிக்கிழமை மதியத்துக்குள்ளாகவே யார் கையில் ஆட்சி என்பது முடிவாகிவிடும்.

     பண மதிப்பு இழப்புக்குப் பிறகு தேர்தல் என்பதால், பாஜகவுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்குச் செல்வாக்கு உள்ளது என்பது தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும்.

     இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். உத்திரகாண்ட், மணிப்பூரில் ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் உள்ளது. கோவா, பஞ்சாபில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. தொடர்ந்து மாநிலங்களை இழந்துவரும் காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய சூழலில் உள்ளது.

     கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வெறும் 44 தொகுதிகளையே காங்கிரஸ் கட்சியால் பெற முடிந்தது. அதன்பிறகு நடந்த, அஸ்ஸாம், ராஜஸ்தான், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சி அந்தஸ்தை இழந்து, மிகக் குறைந்த இடங்களையே பெற்றது. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா, ஒரிசா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையின் அணுகுமுறை காரணமாக, தோல்வியைச் சந்திக்கும் நிலைக்கு ஆளானது.

     காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும், மற்ற மாநிலங்களில், இரண்டாவது பெரிய கட்சியாகவும் இருந்தது. ஆனால், சமீபத்திய தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்குச் சொல்லிக்கொள்ளும் விதத்தில் இல்லை. பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நான்காவது இடமே கிடைத்தது. இதனால்தான், உத்திரபிரதேச தேர்தலில் கூட கூட்டணி வைக்கும் அளவுக்குக் காங்கிரஸ் இறங்கிவந்திருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

     வழக்கமாக நான்கு முனை போட்டி இருக்கும் உத்திரபிரதேசத்தில், இந்த முறை திடீர் திருப்பமாக மும்முனை போட்டிதான் நிலவியது. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு வரை,     டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித்தான் உத்திரபிரதேசத்தின் அடுத்த முதல்வர்; 27 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த ஆட்சியை மீட்போம் என்று சொல்லி மக்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி,

கடைசி நேரத்தில், தன்னுடைய அறிவிப்பை திரும்பப் பெற்று, ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

     பா.ஜ.க மற்றும் பகுஜன் சமாஜ் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. மும்முனை போட்டி நிலவினாலும், போராட்டம் என்பது

     சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையேதான்.

     கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளும் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தன. காங்கிரஸ் கூட்டணி அமைந்தபிறகு, பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மை என்பது தவிடுபொடியாகிவிட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

     உ.பி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஒரு இஸ்லாமிய வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லை. உ.பி-யில்தான் அதிக அளவில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கடந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இஸ்லாமியர்கள் 70 விழுக்காட்டு பேர் சமாஜ்வாடிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். காங்கிரசுக்கு 19 விழுக்காட்டு பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். எனவே, இஸ்லாமியர்களின் வாக்கு அப்படியே சமாஜ்வாடி கூட்டணிக்குச் செல்லும்.

     இது, தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு இருக்கும். சமாஜ்வாடிக்கு யாதவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஓட்டு மிகப்பெரிய வாய்ப்பு. இருப்பினும், சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்துக்கு வராதது சமாஜ்வாடி கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

     அதேநேரத்தில், உயர் வகுப்பினர் வாக்கு பா.ஜ.க-வுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 50 விழுக்காட்டுற்கும் மேற்பட்டவர்களின் வாக்கு பா.ஜ.க-வுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு சென்றுவிடும். இதன் அடிப்படையில், ஆளும் சமாஜ்வாடிக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது.

     பா.ஜ.க-வுக்கு 150 முதல் 200 தொகுதி கிடைக்கும் என்றும் காங்கிரஸ், சமாஜ்வாடிக்கு 130 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்றும் ஒரு கருத்துக்கணிப்புக் கூறுகிறது.

     மற்றொரு கருத்துக்கணிப்போ, சமாஜ்வாடி கூட்டணிக்கு அதிக இடம் கிடைக்கும் என்கிறது. அரசியல் விமர்சகர்களோ, தொங்கு சட்டமன்றம் அமைவதை உத்திர பிரதேச மக்கள் விரும்புவது இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொங்கு சட்டமன்றத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். எனவே, நிலையான அரசு அமைய யாரைத் தேர்வு செய்யவேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும் என்கின்றனர்.

     403 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்திர பிரதேசத்தில் பெரும்பான்மையைப் பெற 203 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய முனைப்பில் கட்சிகள் உள்ளன.

     மற்ற மாநிலங்களைப்பொருத்தவரை, மணிப்பூர் மற்றும் உத்திரகாண்டில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்றும், கோவா மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் வெற்றி, அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

     எல்லாக் கட்சிகளும்,

நாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம், அதற்கு உங்கள் ஆதரவு தேவை என்று வாக்காளர்களிடம் கேட்டிருக்கின்றனர். மக்கள் என்ன தீர்ப்பு அளித்திருக்கிறார்கள் என்பது 11-ம் தேதி தெரிந்துவிடும்.

     புயலுக்கு முன்பு நிலவும் பெரிய அமைதியாக இந்திய அரசியல் அமைதியாக இருக்கிறது. இரண்டு நாட்கள் காத்திருப்போம்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.