14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி அகவை 38. அவருக்கு திருமணமாகி, மனைவி இரண்டு மகள்கள் உள்ளனர். திவாரி தனது நண்பருடன் சேர்ந்து உணவகம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று அதிகாலை 1:30 மணியளவில் சொகுசு காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது சாலையில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த காவல் துறையினர் காரை மறித்தனர். ஆனால் வேகமாக வந்த கார் நிற்காமல் செல்ல முற்பட்டது. எனினும் வாகன சோதனைக்காக பைக்கில் நின்று கொண்டிருந்த 2 காவலர்களும் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். கார் வேகமாக மோதியதில், காவலரின் பைக் கீழே சரிந்தது. இதையடுத்து விவேக் திவாரி காரை வேகமாக ஓட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் விவேக் திவாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சற்று நேரத்துக்கு பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவலர் பிரசாந்த் குமார் கூறுகையில் காரில் வந்தவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியாக இருந்தது. காரை நிறுத்தாமல் சென்றதுடன் எங்களை காரை ஏற்றி கொலை செய்யவும் முயன்றனர். இதனால் எங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தினோம் எனக் கூறினார். ஆனால் விவேக் திவாரியுடன் காரில் சென்றவர்கள் காவல் துறையினர் தெரிவித்த தகவலை மறுத்துள்ளனர். எங்களை தடுத்து நிறுத்தி பணம் பறிக்க அவர்கள் முயன்றனர். பயந்துபோனதால் நாங்கள் அந்த இடத்தை விட்டு செல்ல முற்பட்டோம். ஆனால் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். எதும் கூறாமல் விவேக்கை சுட்டுக் கொன்று விட்டனர் எனக் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், காவல் துறையினர் இருவரும் விதிமுறையை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவியை சுட்டுக் கொன்றதற்கான முதல் கட்ட ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்தது பல்வேறு அதிரடிச் செய்திகளுக்குச் சொந்தமான ஆதித்தியாநாத் மாநிலம். சம்பவம் நடந்த நேரம் அதிகாலை 1.30 என்கிற நள்ளிரவைத் தாண்டிய நேரம். பாதிக்கப்பட்டவர் குடும்பத்தாரோடு பயணிக்க வில்லை ; மற்றும் மேல்தட்டு குடிமகன். இந்த பன்னாட்டு நிறுவன ஊழியர் சுட்டுத்தள்ளலில், நடந்தது என்ன? கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? உண்மை வெளிவருமா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,926.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



