ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள வேளாண் சட்டங்களை, கறுப்புச் சட்டங்கள் என்று கூறி பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலுமிருந்து பெருந்திரளாக பல்லாயிரக்கணக்கான உழவர்கள் திரண்டு போராடி வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களாக சிங்கு, டிக்ரி மற்றும் காசிபூர் எல்லைகளில் இந்த உழவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரம் மற்றும் கண்ணீர் புகை இவற்றை பயன்படுத்தியும் இந்த உழவர்கள் கிஞ்சித்தும் அசைந்து கொடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். உழவர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் இன்று டெல்லி விக்யான் அரங்கத்தில் மாலை 3 மணிக்கு மேல் கலந்துரையாடல் நடைபெற்றது. ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் பியூஸ் கோயல், வணிகத்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் மற்றும் வேளாண் துறை செயலர் சஞ்சய் அகர்வால் ஆகியோர் உழவர்தரப்பு பேராளர்கள் 35 பேருடன் பேசினர். இக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் நரேந்திர தோமர், வேளாண் சட்டங்களை குறித்து பரிசீலிக்க குழு ஒன்று அமைக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தார். உழவர்கள் தரப்பில் அந்தக் குழுவிற்கான பேராளர்களின் பெயர்களைத் தெரிவிக்கும்படியும் அக்குழுவில் அரசு அதிகாரிகள் மற்றும் வேளாண்துறை வல்லுநர்களும் இடம்பெறுவர் என்றும் அவர் கூறினார். ஆனால், இந்தக் குழு அமைக்கும் ஆலோசனையை ஏற்க மறுத்துவிட்டனர். இப்படி குழுஅமைத்து பேசுதெல்லாம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என்று அவர்கள் தெரிவித்தனர். சிறப்பு குழு அமைப்பது என்ற அரசின் முன்மொழிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய வேளாண் சட்டங்களை நீக்கம் செய்யவேண்டும். அரசின் எந்த வகையான வன்முறை முயற்சிகளுக்கும் அஞ்சி நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. எங்கள் போராட்டம் தொடரும் என்று உழவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைக்க இருப்பதாகவும் சனிக்கிழமை டெல்லி சென்று உழவர்களுடம் சேர்ந்து போராட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உழவர்கள் அமைதியான வழியில் போராடி வருகின்றனர். அவர்கள் மீது தண்ணீரையும், கண்ணீர் புகையையும் பயன்படுத்தி கலைக்க முயற்சித்ததை கண்டிக்கிறோம், என்று ஒலிம்பிக் ஹாக்கி வீரரும் அர்ஜூனா விருது பெற்றவருமான சஜ்ஜன் சிங் சீமா கருத்து தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் ஓராண்டு கூட டெல்லியில் தங்கி போராடுவதற்கான உணவு பொருள்களை கொண்டு வந்திருப்பதாக உழவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான உழவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து டெல்லி விரைந்து கொண்டுள்ளனர். நாளை மறுநாள் மீண்டும் உழவர் பேராளர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப் பட்டுள்ளனர்.
16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மூன்று மாதங்களுக்கு முன்பு மழைக்கால கூட்டத் தொடரின்போது நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று கூறி பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலுமிருந்து பெருந்திரளாக பல்லாயிரக்கணக்கான உழவர்கள் திரண்டு போராடி வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



