ஒரே நபர் மீண்டும், மீண்டும் வங்கிகளுக்கு வந்து சட்ட விரோதமாக பணம் பெறுவதை தடுக்க கை விரலில் அடையாள ‘மை’ வைக்கப்படும் என்று நடுவண் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறி உள்ளார். நடுவண் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள், புதிய ரூபாய் நோட்டுகளை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தை பல்வேறு நபர்களிடம் கொடுத்தனுப்பி வங்கிகளில் கொடுத்து கருப்புப் பணத்தை மாற்றுகிறார்கள். இதன் மூலம் பல்வேறு நபர்கள் மீண்டும், மீண்டும் வங்கிகளுக்கு வந்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்கள் தங்களது கருப்புப் பணத்தை முதலீடு செய்யும் இந்த நடவடிக்கை தடுக்கப்படும். இதற்காக இனி பணம் மாற்ற வருபவர்களுக்கு கை விரலில் அடையாள மை வைக்கப்படும். இதனால் ஒரே நபர் மீண்டும், மீண்டும் வங்கிகளுக்கு வந்து சட்ட விரோதமாக பணம் பெறுவது தடுக்கப்படும். பல்வேறு நபர்கள்தான் மீண்டும் மீண்டும் வருவதால் தான் நாடெங்கும் வங்கிகளில் நீண்ட கூட்டம் கூடுகிறது. இனி அது தவிர்க்கப்படும். ஒருவர் பணம் மாற்றும் போது அந்த கவுன்டரிலேயே கை விரலில் அடையாள மை வைக்கப்படும். தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்களுக்கு மை வைப்பது போல இந்த மை வைக்கப்படும். கை விரலில் அடையாள மை வைப்பது பெரு நகரங்களில் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. மற்ற பகுதிகளில் நாளை முதல் இது அமல்படுத்தப்படும். கை விரலில் அடையாள மை வைப்பதால் இனி வங்கிகளில் நெரிசல் குறையும். புதியவர்கள் வந்து மிக எளிதாக தங்களிடம் உள்ள பழைய பணத்தை மாற்றி செல்ல முடியும். ஜன்தன் வங்கி கணக்காளர்கள் தங்கள் வங்கி கணக்கில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பணத்தை தங்கள் வங்கி கணக்கில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பணத்தை தங்கள் வங்கி கணக்கில் ஒரு போதும் சேர்க்க அனுமதிக்க கூடாது. கருப்பு பணம் பதுக்கி வைத்து இருப்பவர்கள் புதிய முறைகளில் வரத் தொடங்கியுள்ளனர். அதை தடுக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. அது பணத்தை முதலீடு செய்பவர்களைக் கண்காணிக்கும். வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பழைய ரூபாய் நோட்டுகளை உடனுக்குடன் அனுப்பும்படி அறிவுறுத்தியுள்ளோம். அந்தப் பழைய பணத்தை சேகரிக்க சிறப்பு தனிப்படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நடுவண் அரசிடம் போதுமான அளவுக்கு தேவையான பணம் உள்ளது. கூட்டுறவு வங்கிகள், அஞசல் நிலையங்களில் கூடுதல் பணத்தை கை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பணத்தை மாற்றும் விஷயத்தில் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதி அடையவோ தேவை இல்லை. பொறுமையாக புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். இதற்கிடையே நடுவண் அரசின் இந்தப் புதிய நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஊழியர் சங்க பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கை விரலில் அடையாள மை வைக்கும் முறையால் சாதாரண மக்கள்தான் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று வங்கி ஊழியர் சங்கத்தினர் கூறினார்கள். இந்த நிலையில் வங்கி ஊழியர்களுக்கு ரிசர்வ் வங்கி இன்று ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் வங்கி நடவடிக்கைகள் தொடர்பான ரகசிய தகவல்களை கசிய விடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மாற்றப்படுவது தொடர்பாக பிரதமர் மோடி இன்று 2-வது தடவையாக நிதி அமைச்சக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கம் எப்படி நடந்து வருகிறது என்பதை கேட்டறிந்தார். சில புதிய உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வரும் நாட்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மாற்றும் விவகாரத்தில் புதிய அதிரடி நடவடிக்கைகள் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



