Show all

சவுக்கிதார் மோடி குறித்து! பணக்காரர்களுக்கு மட்டுமே உழைக்கும் காவலாளி: பிரியங்கா விளக்கம்

ஹிந்தியில் இதுவரை எந்தச் சொல்லும் இவ்வளவு கேவலப்பட்டதில்லை. பாஜகவினர் தங்களை சவுக்கிதார் என்று அழைத்துக் கொள்ள, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரின் கேலி கிண்டல்களால், 'ஹிந்தியில் எனக்கு பிடிக்காத வார்த்தை சவுக்கிதார்' என்பது இந்தியாவின் தேசிய முழக்கமாகி விட்டது.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தீவிரவாதத் தாக்குதலை வைத்து அள்ளிக்குவிக்கலாம் வாக்குகளை என்று எண்ணி பாஜக மிக உற்சாகமாக காய் நகர்த்தியது. விளையாட்டு வீரரான இம்ரான்கான் அபினந்தனை எளிதாக விடுவித்து இந்த விளையாட்டில் அதிக வெற்றிப் புள்ளிகளை அவர்கள் மக்களிடம் சம்பாதிப்பதற்கு பயன்பட்டுப் போய் விட்டது.

அதை எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் எல்லாம் திறனாய்வு செய்ய, அவர்களை யெல்லாம் பாஜகவினர் அல்-இந்தியர்கள் என்று கூறியதோடு, நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவினர் தங்களை சவுகிதார் (காவலாளி) என்று அழைத்து வருகின்றனர்.  

மேலும், பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கீச்சு உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களது பெயருக்கு முன்பு 'சவுகிதார்' என்ற ஹிந்திச்சொல்லை இணைத்துள்ளனர். மறுபுறம், சவுகிதார் என்ற சொல்லை பாஜக எதிர்ப்பாளர்கள் ஏறத்தாழ கேலிச் சொல்லாக்கிவிட்டனர். இந்நிலையில், சவுகிதார்கள் பணக்காரர்களுக்கு மட்டுமே உழைப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கரும்பு உழவர்களுக்கு ரூ.10,000 கோடி தொகை வழங்கப்படாமல் இன்னும் நிலுவையில் இருப்பதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி மாநில அரசை பிரியங்கா காந்தி கடுமையாக சாடினார்.

இதுபற்றி பிரியங்கா காந்தி தனது கீச்சுப் பக்கத்தில், 'கரும்பு உழவர்களின் குடும்பங்கள் இரவு பகலாக உழைக்கின்றன. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை வழங்காமல் உ.பி அரசு பொறுப்பில்லாமல் செயல்படுகிறது. இந்த ரூ.10,000 கோடி வழங்கப்படாவிட்டால் உழவர்களின் குழந்தைகளுக்கான கல்வி, உணவு, சுகாதாரம் ஆகியவை கேள்விக்குறியாகிவிடும்.

மேலும் அடுத்த சாகுபடிக்கு தேவையான நிதி ஆதாரம் அவர்களிடம் இருக்காது. இந்த சவுகிதார்கள் அனைவரும் பணக்காரர்களுக்காக மட்டுமே காவலாளிகளாக இருக்கின்றனர். ஏழைகளை பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை' என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,101.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.