பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்
மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். டெல்லி தியோலி சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்
பிரகாஷ் ஜர்வால் மீது கிரேட்டர் கைலாஷ் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை பெண் ஒருவர்
புகார் மனு அளித்தார். புகாரில் கடந்த மாதம் 2-ந் தேதி குடிநீர் பிரச்சினை தொடர்பாக
சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்து முறையிடச் சென்றபோது தன்னிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும்,
பாலியல் தொல்லை அளித்ததாகவும் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பிரகாஷ் ஜர்வால்
மீது கிரேட்டர் கைலாஷ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். முன்னதாக இது தொடர்பாக டெல்லி ஆளுநர் அலுவலகத்திலும், டெல்லி
காவல்துறை அலுவலகத்திலும் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் மீது தான் புகார் தெரிவித்ததாகவும்
அந்த பெண் குறிப்பிட்டார். தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த பிரகாஷ் ஜர்வால் அரசியல் பழிவாங்கும்
நோக்கத்துடன் இந்தப் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது என்று கூறிஉள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டின்பேரில் கடந்த 2 வாரங்களில் காவல்துறை
வழக்குப்பதிவு செய்த 2-வது ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் இவர் ஆவார். ஏற்கனவே தன்னைச் சந்திக்க வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக
கூறப்பட்ட புகாரின்பேரில் தினேஷ் மொகானியா என்ற ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் மீது
காவல்துறையினர் வழக்கு பதிந்து அவரை கடந்த மாதம் 25ந்தேதி கைது செய்தனர். பிரகாஷ் ஜர்வால்
இதுபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது 2-வது முறையாகும். பெண்ணுக்குப் பாலியல் தொல்லை
அளித்ததாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பது,
அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



