Show all

500, 1000 ரூபாய் தாள்களை வைப்பு செய்ய அரசியல் கட்சிகளுக்கு விலக்கு

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரி விலக்கு சலுகை குறித்த விமர்சனங்களுக்கு நடுவண் நிதி அமைச்சகம் பதிலளித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் வங்கி கணக்குகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களை வைப்பு செய்து இருந்தால், அந்தத் தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று நடுவணரசு வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா தெரிவித்திருந்தார் அரசியல் கட்சிகள் பெறும் வருமானத்துக்கு வருமான வரிச்சட்டம் 13ஏ பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், கட்சிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் பணம் நன்கொடையாகவோ அல்லது பிற வருவாய் மூலம் கிடைத்ததாகவோ இருக்கலாம் என்றும் அப்போது அவர் கூறினார். ஆனால் தனி நபர்களின் வங்கி கணக்குகளில் வைப்பு செய்யப்பட்ட தொகை பற்றிய விவரங்களை வருமான வரித்துறை ஆய்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2.50 லட்சத்துக்கு மேல் வைப்பு செய்யும் சாமானியர்கள் பற்றி வருமான வரித்துறை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளுக்கு மட்டும் விதி விலக்கு அளித்தது சரியல்ல என்று அவர் டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். கருப்பு பணம் அதிக அளவில் அரசியல் கட்சிகளிடம்தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், நடுவண் அரசை விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வருமான வரி சட்டம் பிரிவு 13ஏ-ன்கீழ் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை உண்டு. வைப்பு செய்யப்பட்ட கணக்கு குறித்த ஆவண விவரம் வருமான வரித்துறையிடம் இருக்கும். கட்சிக்கு வழங்கப்படும், 20,000 ரூபாய்க்கு மேலான தனி நபர் பங்களிப்புக்கு கணக்கு காட்ட வேண்டும். கட்சிக்கு வந்த நன்கொடை குறித்து நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.