Show all

1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இந்தியாவில் 33 மரணங்கள்

500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 9-ந் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள். உழைத்து சம்பாதித்த பணத்தை, வங்கியில் இருந்தும், ஏ.டி.எம்-மில் இருந்தும் எடுப்பதற்கு பல மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது. ஒருநாளைக்கு 2,000 ரூபாய் எடுப்பதற்கே குறைந்தது நான்கைந்து மணி நேரமாகிறது. ஏ.டி.எம்-மில் ஒருநாளைக்கு 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் வங்கிகளில் நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய் மட்டுமே மாற்றித்தர முடியும்; ஒருவரே திரும்பத்திரும்ப வங்கிக்கு வருதைத் தடுக்க விரலில் மை வைக்கப்படும் என நடுவண் அரசு புதுப்புது யோசனைகளைக் கொண்டு வந்தாலும், நெரிசல் குறைந்தபாடில்லை. அன்றாடச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுப்பதற்குள் மக்கள் சின்னாபின்னமாகிவிடுகின்றனர். 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள், இதன் விளைவாக இந்தியாவில் 33 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல கோடி மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வங்கி வாசல்களில் தவமாய் காத்திருக்கின்றனர். இதுகுறித்த செய்தி, பல ஆங்கிலச் செய்தித்தாள்களிலும், இணையதளங்களிலும் வைரலாகப் பரவி வருகின்றன. பஞ்சாப்பைச் சேர்ந்தவர் சுக்தேவ் சிங். தனது மகளின் திருமணத்துக்காகச் சேமித்துவைத்திருந்த பணம் செல்லாது எனக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்தார். மகளின் திருமணத்துக்கு நான்கு நாட்களே இருந்த நிலையில், சுக்தேவ் சிங் வைத்திருந்த பணத்தை யாரும் மாற்றவில்லை. இதனால், மாரடைப்பு வந்து இறந்துபோனார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவர் சுமித், தனது தாய் 100, 50 ரூபாய் நோட்டுகளைத் தரவில்லை என தற்கொலை செய்துகொண்டார். ஒடிசாவில் உடல்நிலை சரியில்லாத இரண்டு வயது குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக ஆட்டோ பிடிக்க முயற்சித்தனர் அந்தக் குழந்தையின் பெற்றோர். அவர்களிடம் 500 ரூபாய் மட்டுமே இருந்ததால், ஆட்டோ டிரைவர்கள் அவர்களை அழைத்துச் செல்லவில்லை. இதனால் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தெலங்கானாவில் 75 வயதான லக்ஷ்மி நாராயணன் என்பவர், தனது 1.7 லட்ச ரூபாய் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய நீண்டநேரமாக வரிசையில் நின்றதால் உடல்நலம்குன்றி மரணம் அடைந்தார். பீகாரில், சுரேந்திர சர்மா என்ற முதியவர் பணப் பரிமாற்றத்துக்காக வங்கியில் வரிசையில் நின்றபோது பலியானார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹால்கி லோதி என்ற விவசாயி, விவசாயத்துக்குத் தேவையான விதை மற்றும் உரங்கள் வாங்க 100 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் தற்கொலை செய்துகொண்டார். மீரட்டைச் சேர்ந்த 60 வயதான கூலித் தொழிலாளியான அன்சாரி, வங்கியில் செல்லாத பணத்தை மாற்ற நின்றபோது மாரடைப்பு வந்து மரணம் ஆனார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ரகுநாத் வர்மா, தனது மகனின் திருமணச் செலவுக்காகப் பணத்தை எடுக்க மூன்று நாட்களாகத் தொடர்ந்து வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், அதிகாரிகள் பணத்தை தரவே இல்லை. நான்காவது நாளாக வங்கியில் காத்திருந்தபோது உயிரிழந்தார். உத்தரப்பிரதேசத்தில் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்குச் சொந்தமான மருத்துவமனையில், பழைய நோட்டுகளைக் கொடுத்து, குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அந்தக் குழந்தை பலியானது. டெல்லியைச் சேர்ந்த ரிஸ்வானா என்ற 24 வயதான பெண், மூன்று நாட்கள் முயன்றும் பழைய நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். தாம் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கடைக்காரர்கள் வாங்கிக்கொள்ளாததால், தன் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத சோகத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டார். கர்நாடகாவில் பெண் ஒருவர் தன் குடிகாரக் கணவிடம் இருந்து காப்பாற்றிச் சேமித்து வைத்திருந்த பணத்தை மாற்ற வங்கிக்குச் சென்றபோது, அதை தொலைத்துவிட்டார். அந்தச் சோகத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டார். சட்டீஸ்கரில் விவசாயி ஒருவர், தான் சேமித்துவைத்திருந்த 3,000 ரூபாய் பணத்தை மாற்ற 3 நாட்களாக வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், நெரிசல் மிகுதியால் பணத்தை மாற்ற முடியவில்லை. இதன் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். கான்பூரில் வயதான பெண் ஒருவர், தான் சேமித்துவைத்திருந்த பணத்தை மாற்றுவதற்காக எண்ணிக்கொண்டிருந்தபோது உயிரிழந்தார். கான்பூரில், பிரதமர் மோடி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்தார். பிரதமரின் அறிவிப்பு வந்த முன்தினம்தான் இறந்துபோனவர் 70 லட்ச ரூபாய்க்கு தனது நிலத்தை விற்றுள்ளார். மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பழைய நோட்டுகளை ஏற்க மறுத்ததால், பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. அதேபோல் விசாகப்பட்டினத்திலும் 18 மாத குழந்தை உயிரிழந்தது. கர்நாடகாவில் கோபால் ஷெட்டி என்ற 96 வயது முதியவர், பணத்தை மாற்ற வங்கியில் வரிசையில் நின்றபோது உயிரிழந்தார். போபாலில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் காசாளர் மக்களுக்குப் பணத்தை மாற்றித் தந்துகொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இது போல் பைசாபாத் சேர்ந்த வியாபாரி ஒருவர், மத்திய பிரதேச பி.எஸ்,என்.எல் ஓய்வு பெற்ற தொழிலாளி வினய் பாண்டே,கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த 75 வயது கார்த்திகேயன்,குஜராத்தை சேர்ந்த பரகத் ஷேக், மும்ப்பை சேர்ந்த விஸ்வாஷ் வர்தாக் ஆகியோர் மரணமடைந்து உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.