15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள், மற்றும் நேற்று காலை, பெரிய அளவில் மழை பெய்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பெய்ய வேண்டிய மழை மொத்தமாக ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறுகிறார்கள். ஓமன் நாட்டில் மட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள ஏமன் நாட்டிலும் இந்த மழை பெய்துள்ளது. இந்த மோசமான மழை காரணமாக 15 பேர் இதுவரை மரணம் அடைந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது. அங்கு மீட்பு பணி செய்ய முடியாமல் அரசாங்கம் திண்டாடி வருகிறது. இன்னும் அங்கு சிறிய அளவில் மழை பெய்து கொண்டே இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரிய மழைக்கு அங்கு ஏற்பட்ட புயலே காரணமாகும். மெகுனு என்று அந்தப் புயலுக்குப் பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்தப் புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து கொண்டே சென்று பெரிய அளவில் மழையை உண்டாக்கி உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த புயல் வீசியது. 260கிமீ வேகம் வரை இந்த புயல் வீசியது. இங்கு மேக வெடிப்பிற்கு நிகராக மழை பெய்துள்ளது. மொத்தமாக ஒரு இடத்தில் கூடி இருக்கும் மேகம் அப்படியே வெடித்து மொத்தமாக மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று கூறுவார்கள். இதனால் ஓமனில் உள்ள சலாலா நகரில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக எல்லா பகுதிகளும் இதனால் மூழ்கி இருக்கிறது. இந்த மழை மற்றும் புயல் காரணமாக இன்னும் வீடுகளில் சிக்கி உணவின்றி தவிக்கும் மக்களை காப்பற்ற அரசு திணறி வருகிறது. மொத்தம் 2 லட்சம் வீடுகளை இந்த வெள்ளம் சூழ்ந்துள்ளது. மொத்தமாக கடந்த மூன்று நாட்களாக அந்த நகரம் ஸ்தம்பித்து போய் உள்ளது. சலாலாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 278.2 மிமீ மழை பெய்துள்ளது. புயல் மற்றும் மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இந்த மழையின் வீரியம் குறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி, பார்ப்பவர்களை அச்சச்சோ என்று அனுதாபப்பட வைக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,802.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



