08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விஜய் நடிக்கும் அவரது 62வது திரைப்படத்திற்கு 'சர்கார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ். நடிகர் விஜய் நடித்து பெரிய வெற்றியைத் தந்த மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி என முதன்மை கதாப்பாத்திரங்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் முதல்பார்வையும் பட நிறுவனத்தினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் கருப்பு நிற உடையுடன் காட்சியளிக்கும் நடிகர் விஜயின் பின்புறத்தில் இருக்கும் நகரம் எதோ வெளிநாடு போல் காட்சியளிக்கிறது. செயலலிதா காலத்தில் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்று, 'தலைவா' படப்பெயருக்கு விஜய் பட்ட பாடு அவர் மறந்திருக்க மாட்டார். தற்போது 'சர்கார்' என்று துணிச்சலாக பெயரிடப்பட்டுள்ளதற்கு காரணம் இருக்கும். மேலும் இந்த முதல்பார்வையில் முக்கிய காரணியாக பார்க்கப்பபடுவது அவர் புகைப்பிடிப்பதுதான். இனி நான் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் வேண்டுகோளுக்கு அவர் இதற்கு முன் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பின் அவர் நடித்த துப்பாக்கி, மெர்சல் போன்ற திரைப்படங்களிலும் இதுபோல் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்திருந்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,826.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



