தங்களைத் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு நிரந்தரத் தூக்கத்தை தேர்வு செய்த முல்லை குறித்து, ஓயாமல் பதிவிட்டு பதிவிட்டு சோகத்தில் திளைக்கும் கொண்டாடிகள். 27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: பதிவிட்டு பதிவிட்டு மாய்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர் பார்வையாளர்களும், நண்பர்களும், உடன் நடிகர்களும்; தங்களைத் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு நிரந்தரத் தூக்கத்தை தேர்வு செய்த முல்லை குறித்து. பாண்டியன் ஸ்டோர் தொடரில் விளையாட்டாக பேசிய அந்த உரையாடலை உண்மையாக்கிப் போய்விட்டாரே முல்லை என்று முனுமுனுக்கிறார்கள் கொண்டாடிகள். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதிரிடம் நான் செத்துப்போயிட்டா நீங்க வேற கல்யாணம் பண்ணி கொள்வீங்களா என்று திரும்பத் திரும்ப கேட்பார். கதிரிடம் கேட்ட அந்த உரையாடல் காணொளியைத் தற்போது அவருடைய கொண்டாடிகள் இப்படி நடக்கும் என்பதற்காகவா அப்பவே அப்படி கேட்டீங்க என்று வருத்தத்தோடு வெளியிட்டு வருகிறார்கள். பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த சித்ரா தற்போது இறந்து விட்டாலும் அவர் பேசிய பேச்சுக்கள் அவருடைய கொண்டாடிகளுக்கும் உடன் நடிகர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சித்ரா இறந்து மூன்று நாட்கள் ஆனாலும் அவருடைய இறப்பின் காரணம் யாருக்கும் தெரியாமல் தான் இருந்து வருகிறது .அது மட்டுமல்லாமல் அவருடைய இழப்பை அவருடைய கொண்டாடிகளும் நண்பர்களும் உறவினர்களும் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தாம் தவித்துக் கொண்டிருக்கின்றனர். முல்லை பேசிய பல காணொளிகளையும் திருத்தம் செய்து பதிவிட்டு தங்களுடைய கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர் கொண்டாடிகளும் உடன் நடிகர்களும். என்னதான் இருந்தாலும் இனி அவர் திரும்ப வரப்போவதில்லை என்பதை அறிந்திருந்தாலும் அவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுவரைக்கும் இருந்த அவர் தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் அவருடைய பழைய காணொளிகளை இப்படிப் பார்த்து வருகின்றனர். அவர் இனி அமைதியாக உறங்கட்டும் என்று அனைவரும் மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸை இனி பார்க்க மாட்டோம். அந்தத் தொடரில் முல்லையை இறந்துவிட்டார் என்று காட்டி விடுங்கள். அவருக்கு மாற்றாக யாரையும் அதில் நடிக்க வைக்காதீர்கள் அப்படி இன்னொருவரை எங்களால் அந்த இடத்தில் பார்க்க முடியாது என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



