Show all

குவியும் கண்டனங்கள்! கட்டாயத் தாலிகட்டி பிற்போக்கு வசனத்தை முன்னெடுத்துள்ள விஜய்தொலைக்காட்சி விளம்பரக் காணொளிக்கு

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பெயரிலான தொடரின், கட்டாயத் தாலிகட்டி பிற்போக்கு வசனத்;தை முன்னெடுத்துள்ள விஜய்தொலைக்காட்சி விளம்பரக் காணொளிக்கு, சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான தமிழ் திரைப்படங்களில் எப்படி பிற்போக்குத்தனம் இருந்ததோ, அதை மீண்டும் சின்னத்திரை தொடர்கள் வழியாக வீடுகளுக்குள் நுழைக்க பார்க்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விளம்பர காணொளியில் காட்டப்படும் காட்சிகள், சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று, திருவள்ளூர் காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் வருண் குமார் தனது கருத்தை பதிவு செய்துள்ளது இந்த விடையத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சின்னத்திரை தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடரில் கதைத்தலைவியாக நடித்திருப்பவர், அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு வந்திருப்பது போலவும், அவர் ஒரு கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் பாரம்பரியத்தை மதிக்கும் பெண் என்று அவர் தன்னைப் பற்றி உடன் பெண்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். 

அந்த கோவிலில் ஒரு காதல் இணை திருமணம் செய்து கொள்வது போலவும், அதை கதைத்தலைவன் (வினோத்பாபு) கதாபாத்திரம் வந்து தட்டி கேட்டு தாலியை பறிப்பது போலவும் காட்சி இருக்கிறது. 

கதைத்தலைவன் இவ்வாறு தாலியை பறிப்பதை பார்த்து கோபமடையும் கதைத்தலைவி இது என்ன காட்டுமிராண்டித்தனம்? அம்மன் சாட்சியாக திருமணம் நடந்து இருக்கிறது. அதை தடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கிறார்.

ஒரு மஞ்சள் கயிற்றை கட்டினால் அதன் பெயர் திருமணமா என்று கதைத்தலைவன் கேட்டதோடு விடாமல், அம்மன் சிலையில் உள்ள ஒரு தாலியை எடுத்து கதைத்தலைவியின் கழுத்தில் கட்டி விட்டு, நெற்றியில் குங்குமம் இட்டு விட்டு, ‘இப்போ நான் உனக்கு தாலி கட்டி பொட்டும் வைத்து விட்டேன். நீ எனக்கு மனைவியா’ என்று கேள்வி எழுப்பி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். கதைத்தலைவியாக நடித்த பெண் அந்த ஆளை பின்னால் நடந்து செல்வது போல அந்த காணொளிக் காட்சி முடிவடைகிறது.

பாலியல்வன்முறை செய்தவருக்கே பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும், என்பது போன்ற பல காட்சிகள் தமிழ் திரைப்படங்களில் முன்பெல்லாம் இடம்பெற்றிருந்தன. கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளாக இந்தப் போக்கு மாறி இருக்கிறது. பாலியல்வன்முறையில் ஈடுபட்டால் அவருக்கு சட்டப்படி தண்டனை பெற்று தர வேண்டுமே தவிர, தாலி கட்டிக் கொள்ளக்கூடாது என்ற நிலை தற்போதைய திரைப்படத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் பெண்கள் பரவலாக பார்க்கக்கூடிய நெடுந்தொடர்களில் இதுபோன்ற முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய சித்தரிப்புகளை காட்சிகளாக வைத்து காட்டினால் அது அவர்கள் மனதில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவேதான் இந்த தொடரின் இந்த விளம்பரக் காணொளிக்கு இத்தனை எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதை கவனித்த திருவள்ளூர் மாவட்ட, காவல்துறைக் கண்காணிப்பாளர் வருண் குமார் விளம்பரக்காட்சி வெளியான கீச்சு பதிவில், இதுபோன்ற செயல்களுக்கு சட்டத்தில் இடம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து ஒரு பின்னூட்டம் இட்டுள்ளார். 

அதில், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 இன் கீழ், பெண்களை தொல்லை செய்தால், அதாவது கல்வி நிலையங்கள், கோவில்கள், பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், திரையரங்கம், பூங்கா, கடற்கரை, திருவிழா நடைபெறும் இடங்கள் உட்பட எந்த ஒரு இடத்தில் வைத்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தாலும் அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் தொன்னூறு விழுக்காடு தொடர்களில் இது போன்ற பிற்போக்குத்தன காட்சிகளே முதன்மை படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைக்கு இந்தக் காட்சி கண்டனம் பெறுவது- இனியும் இது போன்ற காட்சிகளுக்கு கண்டனம் தெடரும் என்கிற முன்னோட்டமாக இது அமைந்தால் சரிதான் என்கின்றனர் பொதுப்பார்வையாளர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.