தமிழர் கொண்டாடும் குலதெய்வத்துள் ஒன்றான மூக்குத்தி அம்மனை வைத்து, உங்கள் குல தெய்வத்தை நீங்களும் நேரடியாகவே பார்க்க முடியும். அப்புறம் எதற்கு சாமியார், பிறமொழி அர்ச்சனை, இடைத்தரகர்கள், சாமியின் கருவறைக்கு வெளியே நீங்கள், சிறப்பு வழி என்கிற ஹிந்துத்துவா நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து, தமிழ்மெய்யியலை தூக்கி நிறுத்துகின்றார்கள். கட்டாயம் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம். 29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழர் கொண்டாடும் கடவுள், இறை, தெய்வம் என்பனவற்றுக்கு அறிவுப்பாடன விளக்கம் தமிழர் பொருள் இலக்கணத்தில் தெளிவாக இருக்கிறது. தமிழர் தம் வீட்டு தெய்வம், குலதெய்வம், காவல்தெய்வம், ஐந்திணை தெய்வங்கள் என்பனவெல்லாம் தமிழர்தம் சான்றாண்மை மிக்க முன்னோர்கள். அவர்களை வீட்டில் கொண்டாடும் போது மஞ்சளில் பிள்ளையார் பிடித்தும், பொதுவில் கொண்டாடும் போது நடுகல் நாட்டியும் வழிபாடோ வணங்குதலோ அன்றி நன்றி பாராட்டினர் தமிழ் முன்னோர். தமிழரோடு பார்ப்பனியர்கள்; கலந்த பிறகே பிள்ளையார், விநாயகர் ஆனது. சேயோன், சுப்பிரமணியம் ஆனது. நடுகல் சிவலிங்கம் ஆனது. தமிழர்களுக்கும் தெய்வங்களுக்கும் இடையிலான தொடர்பு அறிவுப்பாடானது. பார்ப்பனியர் கலப்புக்கு பின்னரே தெய்வங்களுக்கு மாய ஆற்றல்கள் எல்லாம் கொடுத்து- சாமியார், பிறமொழி அர்ச்சனை, இடைத்தரகர்கள், சாமியின் கருவறைக்கு வெளியே தமிழர்கள், சிறப்பு வழி என்கிற ஹிந்துத்துவா நம்பிக்கைகளில் நம்மை முடமாக்க செயல்பட்டு வருகின்றார்கள். தமிழ் மெய்யியல் அடிப்படைகளை, அறிவை, மீட்டெடுப்பதற்கான படந்தான் மூக்குத்தி அம்மன். பொதுமக்களுக்கு சொந்தமான 44 கிலோ மீட்டருக்குள்ளான நிலத்தை, ஒரு சாமியார் அபகரிக்க முயற்சி செய்கிறார். அதனை தடுப்பதற்கு மூக்குத்தி அம்மன் வருகிறார். இறுதியில் வென்றது சாமியா.? சாமியாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை. படத்தின் கதை மிகவும் அழகாகவும், மக்களுக்கு சொல்ல வேண்டியதாகவும் உள்ளது. படத்தின் வெற்றிக்கு ஊர்வசியும், ஆர்.ஜே.பாலாஜியும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொடர்ந்து சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும் ஊர்வசி, ஒரு குறிப்பிட்ட காட்சியில், தனது மகன் லூசு என்று தன்னை திட்டிவிட்டதால், அழுதுக்கொண்டே பேசுகிறார். அந்த காட்சியில் பலரையும் அழவைத்துவிடுவார். படத்தின் கதை நல்ல பலம். சொல்ல வந்த கருத்து தமிழியல் செய்தி. அருமையோ அருமை. கடவுளிடம் நேரடியாக பேசுங்கள். இடையில் யாரும் தேவையில்லை. போலிகளை நம்பாதீர்கள் என்று உரக்க பேசியிருக்கிறார்கள். படத்தில் மூக்குத்தி அம்மானாக வருவது நயன்தாராவா? இல்லையே. மூக்குத்தி அம்மனேதானே நேரடியாக வந்தது போலல்லவா இருக்கிறது என்று பாராட்டத் தோன்றுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



