07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்தின்படி, கடந்த இருபது நாட்களாக புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பெப்சி அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்துள்ளது. திரைப்பட நிகழ்ச்சிகளும், படம்வெளியீட்டுக்கான பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். அதேபோல தமிழ்நாட்டில் திரைப்படப் படப்பிடிப்புகளும் எதுவும் தற்போது நடைபெறவில்லை. தமிழகத்துக்கு வெளியே நாளை மறுநாள் வரை படப்பிடிப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் வேலை நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் அருகே படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படப்பிடிப்புக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் ஹைதராபாத் சண்டைக் கலைஞர்கள் ராம் - லஷ்மண் இடம்பெற்றுள்ளதால் அவர்களுடைய நேரமளிப்பின்படி படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல சசிகுமார் நடித்துவரும் நாடோடிகள் படத்தின் மதுரைப் பகுதி படப்பிடிப்புகள் ஒருநாள் தாமதமாக முடியவடையவுள்ளது. எனவே இப்படத்துக்கும் தில்லியில் நடைபெற்று வரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்பிடிப்புக்கும் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்து பேசினர். அதில், 8விழுக்காடு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை திரையரங்க உரிமத்தை புதுப்பிக்கும் முறையை 3 ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனராம். ஒட்டுமொத்த திரையுலகமும்; ஈடுபட்டிருக்கும் வேலைநிறுத்தம்! யாரால் எப்போது எப்படி முடிவுக்கு வரும் என்று விடை தெரியாமல் பேரறிவாளன் விடுதலை போன்று போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு மட்டும் நேற்று நடந்தது. இந்தப் படப்பிடிப்புக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக படக்குழுவினர்கள் விளக்கம் அளித்தபோதிலும், ஒருசில தயாரிப்பாளர்கள் ஏன் இந்த சிறப்பு அனுமதி என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் கருணாகரன், ‘தமிழன்னு சொன்னா திமிர் ஏறும்’ என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா? என்று தனது கீச்சுவில் பதிவு செய்துள்ளார். மெர்சல் படத்தின் அந்தப் பாடலில் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பாடிய விஜய், நிஜத்தில் ஒற்றுமைக்கு ஒத்துழைக்காமல் படப்பிடிப்பு நடத்துவதாக பொருள் தொணிக்கும் வகையில் இந்த கீச்சுவைப் பதிவு செய்துள்ளதாக புரிகிறது. கருணாகரனின் இந்தக் கீச்சுவுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,733.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



