Show all

தோழி பலி! நடிகை யாசிகா விடுமுறையைக் கொண்டாடிவிட்டு திரும்புகையில், நேற்று பின் இரவில், கார் விபத்துக்குள்ளானதில்

மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காடு, கிழக்குக் கடற்கரை சாலையில் பிக்பாஸ் பருவம் மூன்றில் பங்கேற்ற நடிகை யாசிகா ஆனந்த் ஓட்டி வந்த சொகுசு கார் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த நடிகை யாசிகாவின் தோழி உயிரிழந்தார்.

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: செங்கல்பட்டு மாவட்டம் , மாமல்லபுரம் அடுத்த  சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் நேற்று பின் இரவு ஒரு மணியளவில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரின்மீது மோதியது. அதனால் அந்தக் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

காரில் பயணித்தவர்களின் அலறல் கேட்டு சூளேரிக்காடு பகுதி மக்களும் அவ்வழியாக சாலையில் சென்றவர்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போதுதான் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவது நடிகை யாசிகா ஆனந்த் எனப் பொதுமக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக மாமல்லபுரம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்ததோடு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பொது மக்கள் கொண்டு சென்றனர்.

அப்போது காரில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது நடிகை யாசிகா ஆனந்த்தின் தோழியான ஹைதராபாத்தைச் சேர்ந்த 28 அகவையுள்ள பொறிஞர் வள்ளிச்செட்டி பவானி எனத் தெரியவந்தது. மேல்சிகிச்சைக்காக நடிகை யாசிகா ஆனந்த், அவரின் இரண்டு ஆண் நண்பர்கள் என மூன்று பேரை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காவலர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்தை நேரில் பார்த்தவர்கள், காரில் பயணித்த சிலர் மதுபோதையில் இருந்ததாக தெரிவித்தனர். ஆனால் அந்தத் தகவலைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை. விசாரணை முடிவில்தான் மது அருந்தினார்களா என்ற தகவல் தெரியவரும்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறையினர் கூறுகையில், மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதி கிழக்கு கடற்கரைச் சாலையில் நடிகை யாசிகா ஆனந்த்தின் கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. காரில் பயணித்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 28 அகவையுள்ள பொறிஞர் வள்ளிச்செட்டி பவானி விபத்து நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர், யாசிகாவின் தோழி. வள்ளிச்செட்டி பவானி, அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். 

விடுமுறை கொண்டாட்டத்திற்காக நடிகை யாசிகா ஆனந்த், அவரின் தோழி வள்ளிச்செட்டி பவானி, 2 ஆண் நண்பர்கள் என 4 பேர் மாமல்லபுரத்துக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து சென்னை நோக்கி நடிகை யாசிகா ஆனந்த், காரில் தன்னுடைய நண்பர்களுடன் புறப்பட்டிருக்கிறார். காரை நடிகை யாசிகா ஓட்டியிருக்கிறார். அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. விபத்தை ஏற்படுத்திய நடிகை யாசிகா ஆனந்த் மீது இந்திய தண்டணைச் சட்டப்பிரிவுகள் 279-337-304 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். இதில் 304 சட்டப்பிரிவுக்கு 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என்றனர்.

நடிகை யாசிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, ஜாம்பி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். பிக் பாஸ் பருவம் மூன்றில் பங்கேற்று பேரறிமுகமானவர். பஞ்சாப்பை சேர்ந்த நடிகை யாசிகா ஆனந்த்தின் குடும்பம் டெல்லியில் வசித்தது. பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தனர். அதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில்தான் நடிகை யாசிகா ஆனந்த், படித்தார். தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த நடிகை யாசிகா ஆனந்த் விபத்தில் சிக்கிய நிகழ்வு, அவரின் குடும்பத்தினரையும் மற்றும் கொண்டாடிகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.