கே.பாக்யராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சு திரைப்படம் 36 ஆண்டுகளுக்கு பிறகு மறுஆக்கம் செய்யப்பட உள்ளது. சசிகுமார் கதைத்தலைவனாக இதில் நடிக்கவிருக்கிறார். 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு கே.பாக்யராஜ் இயக்கி, அவரே கதைத்தலைவனாகவும் நடித்த மாபெரும் வெற்றித் திரைப்படம் முந்தானை முடிச்சு. இந்தப் படத்தில், ஊர்வசி கதைத்தலைவியாக அசத்தியிருப்பார். மற்றும் கோவை சரளா, தீபா, பசி சத்யா, நளினிகாந்த் உள்ளிட்ட பலர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். ஏவிஎம் ஸ்டுடியோ தயாரித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். கொண்டாடிகளிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூல் அடிப்படையிலும், விமர்சன அடிப்படையிலும் வெற்றி கண்டது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மறு ஆக்கம் செய்யப்படுகிறது. கே.பாக்யராஜ் இயக்க, சசிகுமார் கதைத்தலைவனாக இதில் நடிக்கிறார். இதனை ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி அனுமதி பெற்று ஜேஎஸ்பி சதீஷ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதைத்தலைவி உள்ளிட்ட மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வுசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஊரடங்கால் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு அனுமதி அளித்தபிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



