24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமான ரஜினி படங்களுக்கு இருக்கும் வரவேற்பு காணப்படவில்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதேபோல புதுச்சேரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 15 திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியானது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் வந்ததால் திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ரஜினிகாந்த் படங்களுக்கு அதிகாலையிலேயே வந்து ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால் முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் குறைவாக வந்திருந்தனர். நாமக்கல்லில் காலா திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது. 20 திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையரங்குக்கு வருகை தந்த போதிலும், எதிர்பார்த்த ரசிகர்கள் கூட்டம் வரவில்லை என திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், சில திரையரங்குகளில் இருக்கைகள் காலியாக உள்ளதாகவும் திரையரங்க ஊழியர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த தூத்துக்குடியில் எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியான முறையில் காலா திரைப்படம் திரையிடப்பட்டது. தூத்துக்குடி ஸ்ரீ பாலகிருஷ்ணா திரையரங்கில், காலா திரைப்படம் அமைதியான முறையில் திரையிடப்பட்டது. முன்னதாக காவல்துறையால் பச்சை படுகொலை செய்யப் பட்ட 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர். இதேபோல், தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் அதிக கூட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,811.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



