Show all

தமிழ்மொழி போற்றுதலே! திருக்குறளின் முதலாவது அதிகாரம்

திருக்குறளின் முதலாவது அதிகாரம், கடவுள்கூறு தெய்வமாக தமிழ்முன்னோர் கொண்டாடி இருந்த, தமிழைப் போற்றுவதற்கானதே என்று தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு 
இது திருவள்ளுவரின் முதல் குறள்.

அதாவது:-
அகர முதற்றே எழுத்தெல்லாம்.
ஆதிபகவன் முதற்றே உலகெல்லாம்

உல் என்றால் வட்டம். அதனால் தமிழ்முன்னோர் நமது புவியை மட்டுமல்லாமல்- வட்டமான கோள்களை எல்லாம் உலகம் என்றே குறிப்பிட்டனர். அந்த வகையாக ஏழுகோள்களை தமிழர் ஏழுலகம் என்று சொல்ல, ஏழுலகத்திற்கு பிராமணர் வேறு பொருள் கற்பிக்கப் போய், இன்றைக்கு ஏழு உலகம் வேறாகவும் ஏழு கோள்கள் வேறாகவும் பார்க்கப்படுகிறது.

எழுத்துக்களுக்கு அகரம் முதல்.
கோள்களுக்கு ஞாயிறு (ஆதிபகவன்) முதல். இந்தக் குறளில் திருவள்ளுவர் போற்ற வந்தது அகரத்தை. 

ஆனால் திருவள்ளுவர் போற்ற வந்தது, ஏதோவொரு தெய்வத்தை என்று தெரிவித்து, பல ஆயிரம் ஆண்டுகளாக பொருள் சொல்லிக் கொண்டு வருகின்றனர் வெறுமனே கருத்துப் பரிமாற்றக் கருவியாகத் தமிழைப் படித்தவர்கள்.

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

கல்வி என்ற அதிகாரத்தில் எண்ணும் எழுத்துமான மொழியை மக்களின் கண்கள் என்கிறார் திருவள்ளுவர்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
என்கிற குறள் மூலமாக.

இப்படிப்பட்ட கண்போன்ற போன்ற மொழியை, அறிவை (வாலறிவன்) அதன் அடிப்படைகளை (நற்றாள்) கொண்டாடா விட்டால் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்னவாக இருக்க முடியும்? என்கிறார் திருவள்ளுவர்.

ஆகவே கல்விக்கு அடிப்படையான அகரத்தை முதலாகக் கொண்ட மொழியை- தமிழை- அதன் அடிப்பகளைத் தொழுது கொண்டாடுவோம் என்கிறார் மொழி வாழ்த்து அதிகாரத்தின் இரண்டாவது குறளில் திருவள்ளுவர்.

திருக்குறளில் உள்ள ஆதிபகவன் ஞாயிற்றைக் குறிப்பதாகும். அகர, எண்குணத்தான், பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் என்பவை அனைத்தும் தமிழைக் கடவுள்கூறு தெய்வமாக முன்னெடுக்கும் வகையிலான சொற்களே.

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலர் என்பது மனமாகிய புத்தகமே. உங்கள் மனதில் நீங்கள் நிறைத்த தமிழின் அடிப்படையைக் பின்தொடர்ந்தால் நிலத்தில் நெடுங்காலம் வாழ்வீர்கள் என்பது இந்தக் குறளுக்குப் பொருள். மனதில் ஏகுவதாகத் தமிழையன்றி வேறு எதைப் பொருத்து முடியும்!

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 

தமிழை அன்றி வேறு எந்தவொன்றுக்கு வேண்டுதல் வேண்டாமை இருக்க முடியும். 


வந்தாரையெல்லாம் எந்த இடும்பையும் இல்லாது வாழ வைப்பது தமிழும், தமிழ்நாடும் அல்லவா!

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

வினைகள் இரண்டு. ஒன்று தன்வினை, இரண்டு பிறவினை. தமிழைப் பொருள் புரிந்து கையாளுகிறவர்களுக்கு அறியாமையினால் விளைந்து விடுகிற இந்த இரண்டு வினைகளும் பாதிக்க முடியாது என்பதே இந்தக் குறளுக்கான பொருள்.

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.   

ஐம்புலன்களின் ஆசை அடக்கு என்று, உலகமே தவறான கருத்தை முன்னெடுத்து வரும் நிலையில்- மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐந்துப் புலன்களும் அறிவறி புலன்கள் என்கிற செய்தியை சமைத்துக் கொடுத்து பொய் அகற்றிய உலகின் ஒப்பற்ற மொழியான தமிழின் நெறியில் நின்றால் நீடு வாழமுடியும் என்பது இந்தக் குறளுக்கான பொருள். 

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு உவமை சொல்ல இயற்கையில் ஒரு பொருளும் இல்லை என்கிற பாட்டிற்குரிய தமிழின் வழி நிற்கா விட்டால் உங்கள் மனக்கவலையை மாற்றுவது அரிது என்கிறது இந்தக் குறள்.

குறள் 8: 
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

தமிழாகிய அறக்கடலின் துணையில்லாமல் மற்ற மற்ற கடல்களை நீந்திக் கடக்க முடியாது என்று பேசுகிறது இநதக் குறள்.

4
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

கோள்களில் உள்ள நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளால் அமைந்த மெய்யாக இருக்கிற பதினெட்டு எழுத்துக்கள் மற்றும் அவைகளை இயக்கும் பொறியாகி உயிராக இருக்கிற பனிரெண்டு எழுத்துக்களின் இயல்புகளைப் பெறவியலாது. மட்டுமல்லாமல், அடிப்படை எண்கள் ஒன்பதின் இயல்புகளையும் அடிப்படையாகக் கொண்ட தமிழின் அடியை வணங்காவிட்டால் அந்த இயல்புகளின் பலன் உங்களுக்குக் கிட்டாது என்பதே இந்தக் குறளின் பொருள்.

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இந்தப் பிறவியில் நீங்கள் சிறப்பாக வாழ்வதற்கு, கட்டாயம் உங்கள் முதல்உடைமையான தமிழைக் கொண்டாடி இருக்க வேண்டும் என்கிறது இந்தக் குறள்.

இந்தக் கட்டுரையைத் தமிழியல் கட்டுரைகள் வலைப்பூவிலும் படிக்க முடியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.