Show all

வினா பேசுபொருளாகியுள்ளது! இந்தியாவில் கட்டாயச் சேனைச் சேவை திட்டத்தை முன்னெடுக்க, தீபாதை திட்டம் சோதனை முயற்சியா?

தீபாதை திட்டம் மாதிரியான, சேனைஆட்சேர்ப்பு வெளிநாடுகளிலும் நடந்து வருவதாக ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் குறுகிய காலத்திற்குச் சேனையில் ஆட்சேர்ப்பு உள்ளதுதாம். இத்தகைய நாடுகளில் சேனைக்குச் சேவை செய்வது கட்டாயம் என்பது இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று.

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியச் சேனையில் குறுகிய கால பணி நியமனங்களுக்கான திட்டம் கடந்த கிழமை வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஒன்றிய பாஜக அரசு தீபாதை என்ற பொருளிலான ஹிந்தித் தலைப்பை வைத்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, தீ வீரர்கள் என்று அழைக்கப்படும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு இந்தியச்சேனையில் கூலிக்குச் சேர்க்கப்படுவார்கள்.

இந்தத் திட்டத்தின்கீழ் கூலிக்கு அமர்த்தப்பட்ட இளைஞர்களில், 25 விழுக்காட்டு பேர்களுக்கு நான்கு ஆண்டுகள் கழித்து இந்தியச் சேனையில் மேலும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். மீதமுள்ளவர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.

இந்தியாவில் முதன்முறையாக சேனையில் இளைஞர்கள் குறுகிய காலத்திற்குக் கூலிக்கு அமர்த்தப்படவுள்ள, இந்தத் தீபாதைத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் கல்வீச்சு, தீ வைப்பு நிகழ்வுகளும் நடந்தன.

சேனையில் இத்தகைய ஆட்சேர்ப்பு வெளிநாடுகளிலும் நடந்து வருவதாக ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் குறுகிய காலத்திற்கு சேனையில் ஆட்சேர்ப்பு உள்ளதுதாம். 

இத்தகைய நாடுகளில் சேனைக்குச் சேவை செய்வது கட்டாயம் என்பது இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று. இத்தகைய நாடுகளில், இதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தீபாதைத் திட்டம் இவற்றைப் போன்றது அல்ல என்று ஒன்றிய பாஜக அரசு கூறுவதை, 'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதான சொலவடைக்கு ஒப்பானதே என்று பேரளவாக கருத்து பரவி வருகிறது. 

இஸ்ரேல் நாட்டில் சேனையில் சேவை செய்வது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாயமாகும். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் ஆண்கள் மூன்று ஆண்டுகளும் பெண்கள் சுமார் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றுவது கட்டாயம்.

சேனைச் சேவைக்கான மிகவும் வலுவான அமைப்பைக் கொண்டுள்ளது தென் கொரியா. உடற் தகுதியுடைய ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் 21 மாதங்களும், கடற்படையில் 23 மாதங்களும், விமானப்படையில் 24 மாதங்களும் பணியாற்றுவது கட்டாயமாகும்.

கட்டாயச் சேனை சேவையை நீண்ட காலமாக கொண்டுள்ள நாடு வட கொரியா. இந்த நாட்டில் ஆண்கள் 11 ஆண்டுகளும், பெண்கள் ஏழு ஆண்டுகளும் சேனையில் பணியாற்ற வேண்டும்.

ஆப்ரிக்க நாடான எரித்திரியாவிலும் சேனையில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இந்த நாட்டில் ஆண்கள், இளைஞர்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள் 18 மாதங்கள் நாட்டின் சேனையில் பணியாற்ற வேண்டும்.

எரித்திரியாவில் இதுபோன்ற முடிவால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சேனையில் கட்டாய சேவை செய்ய விரும்பாத பலர் பிரிட்டனில் தஞ்சம் அடைய கோருவதுண்டு.

சுவிட்சர்லாந்தில் 18 அகவை முதல் 34 அகவை வரையுள்ள ஆண்களுக்கு சேனைச் சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்து வாக்கெடுப்பின் மூலம் முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது. பெண்களுக்குச் சேனையில் கட்டாயம் சேர வேண்டும் என்ற விதி இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் சேனையில் சேரலாம்.

பிரேசிலில் 18 அகவைக்கு மேற்பட்ட ஆண்களுக்கு சேனைச் சேவை கட்டாயம். இந்த கட்டாய ராணுவச் சேவை 10 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.

சிரியாவிலும் ஆண்களுக்கு சேனைச் சேவை கட்டாயம். அந்நாட்டில் நடைமுறையில் இருந்த கட்டாய சேனைச் சேவைக்கான கால அளவை 21 மாதங்களில் இருந்து 18 மாதங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளளது.

அரசுப் பணிகளில் இருப்பவர்கள், கட்டாயச் சேனைப் பணியைச் செய்யாவிட்டால், அவர்களின் வேலை பறிக்கப்படுகிறது. கட்டாய சேனைச் சேவையில் இருந்து தப்பிப்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

ஜார்ஜியாவில் ஓர் ஆண்டு சேனைச் சேவை கட்டாயமாகும். இதில், மூன்று மாதங்கள் போர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மீதமுள்ள 9 மாதங்கள் தொழில்முறை சேனைக்கு உதவும் அதிகாரியாக பணியாற்ற வேண்டும்.

லிதுவேனியாவில் 18 முதல் 26 அகவைக்குட்பட்ட ஆண்கள் கட்டாயமாக ஓராண்டு சேனையில் பணியாற்ற வேண்டும். இதில், பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஒற்றை தந்தையர்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில்
ஆண்கள், பெண்கள் என 4000 பேரை கட்டாய சேனைச சேவைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 8 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாய சேனைச் சேவையில் சேர்க்கப்படுவார்கள்.

20 அகவைக்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் துருக்கியில் சேனைச் சேவை கட்டாயமாகும். அவர்கள் 6 முதல் 15 மாதங்கள் வரை சேனையில் பணியாற்ற வேண்டும்.

கீரிஸில், 19 அகவைக்குட்பட்டவர்களுக்கு 9 மாதங்கள் சேனைப் பணி கட்டாயம்.

ஈரானில் 18 அகவைக்க மேற்பட்ட ஆண்கள் 24 மாதங்கள் சேனையில் பணியாற்ற வேண்டும்.

கியூபாவில், 17 முதல் 28 அகவையுடைய ஆண்கள் இரண்டு ஆண்டுகள் கட்டாய சேனைச் சேவையில் பணியாற்ற வேண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,285.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.