Show all

இலங்கை பயணம் வேண்டாம் என! அமெரிக்க தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு, இலங்கை பயணம் வேண்டாம் என பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கி உள்ளது.

25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள், மருந்து பற்றாக்குறை மக்கள் போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு, இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் உள்ளது. இதனால் இலங்கை பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனால் கோத்தபய ராஜபக்சேவுக்கு கொடுத்த ஆதரவை பிற கட்சியினர் விலக்கி கொண்டனர். அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். இதற்கிடையே இலங்கையில் அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் கூண்டோடு பதவி விலகிட  வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டத்தால் அங்கு செல்பவர்கள் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விபரம் வருமாறு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் சிக்கல் உள்ளது. மளிகை, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்ததோடு, கண்ணீர் புகை குண்டும் வீசி கலைத்துள்ளனர். நாடு முழுவதும் அன்றாடம் அதிகநேரம் மின்தடை உள்ளது. பொதுபோக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் புதிதாக இலங்கை பயணம் செய்ய திட்டமிடுவோர் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பயங்கரவாத தாக்குதல் மேலும் பயங்கரவாத அச்சுறுத்தலால் அங்குள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும். 

பயங்கரவாதிகள் சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், கேளிக்கையகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முதன்மை விளையாட்டு, விமான நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை குறிவைத்து சிறிய அல்லது எச்சரிக்கையின்றி தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொரோனா தொடர்பாக இலங்கைக்கான நிலை -3 பயண கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. நிலை -3 என்பது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதை குறிக்கும். இந்த அறிவுரைப்படி ‛‛அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் அங்கீகரித்த தடுப்பூசியை நீங்கள் முழுமையாக செலுத்தி இருந்தால் கொரோனா தொற்று பாதிப்பும், பாதிக்கப்படும் தன்மையும் குறைவாக இருக்கும். இதனால் சர்வதேச பயணத்துக்கு முன் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,212.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.