Show all

பொருளாதார வல்லுநரின் படர்க்கை நிலை எச்சரிக்கை! இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்தால் இலங்கை மாதிரி நிலைமை தான் ஏற்படும்

பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் படர்க்கை நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது- இன, மத உணர்வில் ஆட்சியை முன்னெடுக்கும் எந்த நாட்டு ஆட்சியாளருக்கும் பொருந்தும். இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்தால் இலங்கை மாதிரி நிலைமை தான் ஏற்படும் என்கிறது அவரது எச்சரிக்கை.

04,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையில் நிலவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இன-மத உணர்வுகளை தூண்டும் அந்நாட்டு அரசின் கொள்கையும் பெருங்காரணம் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் தற்போது வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.. இந்த பொருளாதார நெருக்கடி பற்றி எளிதாக சொல்ல வேண்டும் என்றால் பின்வருமாறு இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம்... டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75.87 தற்போது போர் காரணமாக பொருளாதார தடையை எதிர்கொண்டு இருக்கும் ரஷ்யாவின் ருபேல் மதிப்பு 104. ஆனால் எந்த போரையும், உள்நாட்டு மோதலையும் எதிர்கொள்ளாத இலங்கை ரூபாயின் மதிப்பு 264.44! 

ஆம் 260 ஐ கடந்து மிக மோசமான வீழ்ச்சியை இலங்கை பண மதிப்பு சந்தித்துள்ளது! அந்த அளவிற்கு இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ந்துள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நிலவிய பஞ்சத்தை விட மிக மோசமான பஞ்சமாக இது பார்க்கப்படுகிறது.

இலங்கை பொருளாதாரம் கொரோனாவிற்கு பின்பாகத்தான் வீழ்ச்சி அடைகிறது என்றும் கூட சொல்ல முடியாது. ஏனென்றால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது கொரோனாவிற்கு முன்பே அந்த நாட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை நோக்கித்தான் சென்று கொண்டு இருந்தது. 

முதன்மையாக, சீனாவிடம் வாங்கிய கடன், சீனாவின் பல்வேறு ரோட் அண்ட் பெல்ட் திட்டத்திற்காக வாங்கப்பட்ட நிதி உதவிகள், அதற்கான வட்டி எல்லாமே இலங்கையின் பொருளாதாரத்தை முடக்கி போட்டது. அதன்பின் வந்த கொரோனா காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றது.

முதன்மையாக கொரோனா சமயத்தில் இலங்கையின் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்தது. உலக நாடுகள் பல பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்ட நிலையில், சுற்றுலாத்துறையை கணிசமாக நம்பி இருக்கும் இலங்கை படுமோசமான வீழ்ச்சியை சந்தித்தது. அதிலும் டாலருக்கு நிகரான இலங்கையின் ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டே சென்றது. கடந்த ஆண்டு 190 ஐ தாண்டிய இலங்கை ரூபாய் மதிப்பு இப்போது 260 ரூபாயை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

அந்நாட்டு மைய வங்கியான கட்டுப்பாட்டு வங்கி இதை சரிப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்தும் எதுவும் அந்த நாட்டுக்கு உதவிகரமாக அமையவில்லை. அந்நாட்டு வரலாற்றில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. இதனால் ஒரே வாரத்தில் இரண்டு முறை சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது. ரஷ்ய போர் காரணமாக இன்னொரு பக்கம் இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 207.00 ரூபாயாக உள்ளது. சில இடங்களில் இது 250 ரூபாயை தாண்டி விற்கிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 159.00 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 154,566 ரூபாயாக உள்ளது. இந்தியாவில் இன்று இதன் விலை 53,020 ரூபாய் ஆகும். எரிவாயு, எரிபொருள் வரை அனைத்து பொருட்களுக்கும் விலை அங்கே ஏறிவிட்டது. இதனால் அங்கு நிலக்கரி தட்டுப்பாடும், அதை விலையும் உயர்ந்து கடுமையான மின் தடை சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் விலைபட்டியலை பார்த்தால், நடுத்தட்டு மக்களுக்கு அல்ல, பணக்கார மக்களுக்கே தலையை சுற்றும். ஆம்.. இலங்கையில் ஒரு கிலோ சம்பா அரிசி விலை 210 ரூபாய் ஆகும். அதேபோல் 1 கிலோ துவரம் பருப்பு விலை 380 ரூபாய் ஆகும். கோழி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய். முட்டை ஒன்று 40 ரூபாய். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 250 ரூபாய், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 450 ரூபாய். தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 900 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இந்த விலைவாசி உயர்வு காரணமாகவும், வேலைவாய்ப்பு இன்மையாலும் தலைநகர் கொழும்பில் மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இலங்கையின் அதிபர் கோத்தபய மற்றும் தலைமைஅமைச்சர் மஹிந்த ராஜபக்சே ஆகியோரை எதிர்த்தும் அவர்களின் குடும்பங்களை எதிர்த்தும் போராட்டத்தை நடத்தி வருகின்றன, தலைமையான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி அங்கு தொடங்கிய போராட்டம் அங்கு பெரிய மக்கள் புரட்சியாக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதன்மையாக தலைமை அலுவலகம் முன் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி போராட்டம் செய்து வருகின்றனர். அதிபர், தலைமை அமைச்சர் இருவரும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல லட்சம் பேர்கள் அங்கு கடந்த 4 நாட்களுக்கும் மேலாக போராட்டம் செய்து வருகின்றனர். முதன்மையாக அகவை முதிர்ந்தவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குச்சியில் இரண்டு பக்கமும் கருகிய ரொட்டித்துண்டை வைத்து போராட்டத்தில் ஈடுபடுவது இங்கே போராட்ட அடையாளமாகவே மாறியுள்ளது.

இந்த நிலையில்தான் பொருளாதார வல்லுநரும், எழுத்தாளருமான ஆனந்த் சீனிவாசன் இலங்கையின் பொருளாதாரச் சிக்கலின் இன்னொரு கோணத்தை அணுகி இருக்கிறார். அதாவது பொருளாதார சரிவு என்பதையும் தாண்டி, அந்த நாட்டு அரசின் கொள்கை குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார். 

பொருளாதாரம் மீது கவனம் செலுத்தாமல் மத - இனவாதம் மீது கவனம் செலுத்தியதே இந்த சரிவிற்கு முதன்மையான காரணம் என்று அவர் கடுமையான திறனாய்வை முன்னெடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள கீச்சுவில், பொதுமக்களின் வாழ்வாதார- பொருளாதார மேம்பாடுகளை விட்டு, இன-மத உணர்வுத் தூண்டுதலை மட்டுமே தலைமைத்துவமென ஒரு அரசு இயங்கினால் இந்நிலையை தவிர்க்கவே முடியாது என்பதற்கு, இலங்கையின் தற்போதைய சூழல் ஓர் எச்சரிக்கை, என்று குறிப்பிட்டு இருக்கிறார். இலங்கையில் உள்நாட்டு போர் நிலவிய போதும், அதற்கு பின்பாகவும் பெரும்பாலும் இனவாதம்தான் அதிக கவனம் பெற்றது. மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பின்னடைவை கருத்துப்பரப்புதலில் தலைவர்கள் பேசவே இல்லை.

அதிலும் மீண்டும் ராஜபக்சே குடும்பம் ஆட்சிக்கு வர இன வாத அடிப்படையிலான கருத்துப்பரப்புதல்கள் காரணமாக இருந்தன. சிங்களப் பேரினவாதத்தை கொண்டாடும் மக்களும் பொருளாதார திட்டங்களை பற்றி யோசிக்காமல் அங்கு இன வாதத்திற்கு வாக்களித்ததன் விளைவு, அவர்கள் ரொட்டிக்கும், தக்காளிக்கும் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தான் ஆனந்த் சீனிவாசன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,191.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.