Show all

உலக நலங்கு அமைப்பின் விளக்கம்! கொரோனாவை எதிர்கொள்வதில் காட்டும் மந்த நிலையே, உருமாறிய குறுவிகள் தோற்றத்திற்குக் காரணம்

ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புது புது உருமாறிய குறுவிகள் (வைரஸ்) எதனால் தோன்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து உலக நலங்கு அமைப்பு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த சில மாதங்களாகவே உலகெங்கும் கொரோனா குறுவி பாதிப்பு குறைந்து கொண்டிருந்தது. தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி பணிகளால் தீவிர குறுவி பாதிப்பும், உயிரிழப்புகளும் கூட குறைந்தன. 

இதனால் கொரோனாவின் மோசமான நிலை முடிந்துவிட்டதாகவே பல ஆய்வாளர்களும் கருதினர். இந்தச் சூழலில் தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய குறுவி கண்டறியப்பட்டது. இந்த புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆகிறது. ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா, இதுவரை 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆவதால், இது எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும், எப்படிப் பரவும் என்பதற்கான தரவுகள் இல்லை. 

அதேநேரம் உலக சுகாதார அமைப்பு இதனைக் கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியலிட்டுள்ளது. இந்தச் சூழலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உலக நலங்கு அமைப்பின் டெட்ரோஸ் அதானோம், தற்போது வரை டெல்டா பாதிப்பு தான் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போது புதிதாக ஓமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கே ஓமிக்ரான் குறுவியும கட்டுப்படும். 

இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் பொது நலங்குக் கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், பொதுமக்களிடையே கொரோனா வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மேலும். கொரோனாவால் மோசமாகவும் எளிதாகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு உடனடியாக 2 தடவைகள் தடுப்பூசி போடப்படுவதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும். 

அதிவேகமாகப் பரவும் ஆற்றல் கொண்ட டெல்டா குறுவி பாதிப்பைக் கட்டுப்படுத்தவே பல நாடுகள் போராடிக் கொண்டிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தற்போது உலகில் கண்டறியப்படும் அனைத்து கொரோனா பாதிப்புகளும் டெல்டா பாதிப்பாகவே உள்ளது. டெல்டா கொரோனா பரவுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றவும் நம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாம் விரைவாக எடுக்க வேண்டும். 

இதை நாம் சிறப்பாகச் செய்தால், டெல்டா பரவலைத் தடுத்தாலேயே ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவையும் நாம் கட்டுப்படுத்தலாம். ஆனால் டெல்டா கொரோனா பாதிப்பைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்தால், ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது. 

உலகில் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இரண்டு தடவைகள் தடுப்பூசி பணிகள் முடிந்து ஊக்க தடவை தடுப்பூசி பணிகளும் கூட தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், சில நாடுகளில் தடுப்பூசி பணிகள் மிக மந்தமாகவே நடைபெறுகின்றன. 

இப்படிக் குறைந்த வேகத்தில் நடைபெறும் தடுப்பூசி பணிகள் மற்றும் குறைவான கொரோனா பரிசோதனைகள் காரணமாக புது புது உருமாறிய கொரோனா குறுவிகள் தோன்றும் அபாயம் உள்ளது, என்றும், மேலும் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், என்றார் 

இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா மாறுபட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா குறுவியிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,085.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.