Show all

கமுக்கமாகிவிட்ட முப்பது இலட்சம் கிராமும், 20 நாட்களாகத் தீயாக வலம் வரும் இருபத்தைந்து கிராமும்! போதைப் பொருள்

முந்த்ரா துறைமுகத்தில் முப்பது இலட்சம் கிராம் (3000கிலோ) போதை பொருள்! என்ற அதிர்ச்சித் தகவலுக்கு, எங்களுக்கு அதிகாரம் இல்ல என்ற அதானி குழும விளக்கத்தோடு கமுக்கமாகிவிட்டது. நார் நாராய் கிழித்துத் தொங்கவிடப்படுகிறது 25கிராம்.

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய வரலாற்றிலேயே இதுவரை சிக்காத அளவிற்கு ஒரே இடத்தில் அதுவும் தலைமைஅமைச்சர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில், கௌதம் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 3000 கிலோ அளவிலான ஹெராயின் போதைப் பொருள் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் சோதனையில் சிக்கியது கடந்த மாதத்தில்.   

இந்தியாவில் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை அதிக அளவில் ஒன்றிய அரசு தனியாருக்கு அளித்து வரும் நிலையில், இந்தியப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் ஆதானி இதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் போதை பொருள் சிக்கியதற்கு கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் விளக்கம் கொடுத்திருந்தது. 

இந்திய அரசு சட்டத்தின் மூலம், வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் மற்றும் சுங்க துறை சரக்குகளைத் திறந்து, ஆய்வு செய்யவும், பறிமுதல் செய்யவும் உரிமை உண்டு. ஆனால் துறைமுகத்தை இயக்கும் நிறுவனங்களுக்கு இத்தகைய அதிகாரம் இந்தியாவில் யாருக்கும் இல்லை, துறைமுகத்தை இயக்கும் நிறுவனங்களுக்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த அறிக்கை மூலம் சமுக வலைத்தளத்தில் பரவி வரும் பொய்யான, தவறான கருத்துக்களுக்கு விளக்கம் தரப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்பதாக.

ஆப்கானிஸ்தானில் இருந்து முகப்பூச்சுத் துகளுடன் சேர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு ஈரான் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆசி டிரேடிங் கம்பெனி பதிவு செய்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரைச் சேர்ந்த நிறுவனத்தின் பெயரில் ஹெராயின் அடங்கிய கொள்கலன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. 

இந்நிலையில் வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் ஆசி டிரேடிங் நிறுவனத்தின் உரிமையாளர்களான எம்.சுதாகரன் மற்றும் அவரது மனைவி ஜி.துர்கா பூர்னா வைசாலி ஆகியோரை கைது செய்துள்ளனர். 

இதேபோல் விஜயவாடா முகவரி, ஒரு வீட்டின் முகவரி என்பதால் வீட்டின் உரிமையாளர் விசாரணை செய்யப்பட்டும் வீடு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருவதாகத் தெரிகிறது. முதல்கட்ட விசாரணையில் விஜயவாடா நிறுவனம் பதிவு செய்ய இந்த முகவரியைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது எனக் காவல் துறை தெரிவித்திருந்தது. 

அடுத்து கடந்த இருபது நாட்களாகத் தொடர்ந்து தலைப்பாகி வருகிற 30 கிராம் போதைப்பொருள் வரலாறு இது. நடிகர் சாருக்கான் மகன் ஆர்யன், போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கடந்த பத்தொன்பது நாட்களுக்கு முன்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் பிணை மனு முதலாவது முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சாருக்கான் மும்பை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தனது மகனுக்கு பிணை கேட்டு மனு பதிகை செய்தார். அந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்த மனுக்கான அடுத்த விசாரணை எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நடத்தப்படும் என்று அறங்கூற்றுமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆர்யன் கைதுசெய்யப்பட்டதிலிருந்து மும்பையிலுள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 

ஆர்யனுக்கு சிறப்பு அறங்கூற்றுமன்றம் ஏன் பிணை கொடுக்கவில்லை என்பதை அறங்கூற்றுவர் வி.வி.பாட்டீல் தனது 18 பக்க உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதில், ஆர்யனிடம் போதைப்பொருள் இல்லாவிட்டாலும், அவருடன் சென்ற அர்பாஸ் மெர்ச்சண்டிடம் போதைப்பொருள் இருந்திருக்கிறது. இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமல்லாமல், கப்பல் விருந்துக்குச் சேர்ந்தே சென்றிருக்கின்றனர். இருவரும் போதைப்பொருள் குறித்து பேசியதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இதனால் அர்பாஸ் மெர்ச்சண்டிடம் போதைப்பொருள் இருப்பது ஆர்யனுக்கு தெரிந்திருக்கிறது. இந்த வழக்கில் ஆர்யனிடம் போதைப்பொருள் இல்லை. ஆனால் இரண்டாவது குற்றவாளியான அர்பாஸ் மெர்ச்சண்டிடம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மனுதாரர் தரப்பில் பதிகை செய்யப்பட்டவற்றை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

ஆர்யன் புலனச்செயலியில் சிலருடன் போதைப்பொருள் தொடர்பாக அரட்டை மேற்கொண்டிருக்கிறார். இதன் மூலம் போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஆர்யன் தொடர்பில் இருந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த கமுக்கத் தகவலில் போதைப்பொருளுடன் கப்பலில் விருந்து நடத்த சிலர் வருவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. எனவேதான் சோதனை மேற்கொண்டு போதைப்பொருளுடன் குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் யாரிடமிருந்து போதைப்பொருள் கிடைத்தது என்று தெரிவித்துள்ளனர். அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்ததில் குற்றவாளிக்கு (ஆர்யன்) எதிராக வலுவான ஆதாரம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது'' என்று அறங்கூற்றுவர் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர்கள், நடிகர் சாரூக்கான் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் சாருக்கானிடமும் விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது.

இந்தப் போதைப் பொருள் தொடர்பான மிக அண்மைச் செய்தி: தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பேரறிமுக நடிகை அனன்யா பாண்டேயிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

விஜய்யின் 65 வது படமான பீஸ்ட் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் கதைத்தலைவியாக நடிக்க அனன்யா பாண்டேயின் பெயர் பரிந்துரையில் இருந்தது. இவருக்கு இனி இந்தப்படத்தில் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற செய்தி பரவிவருகிறது.

நடிகர் சாருக்கான் மகனும் வேறு சிலரும் கப்பலில் விருந்து நடத்தியபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். சாருக்கான் மகனின் நண்பரிடம் 25 கிராம் போதைப்பொருள் இருந்தது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் சாருக்கான் மகனின் பிணை மறுக்கப்பட்டது. சாருக்கானின் செல்பேசியில் இருந்து, கப்பல் விருந்து நடந்தபோது அனன்யா பாண்டேயின் புலனத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அனன்யா பாண்டேயிடமும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதலில் அனன்யா பாண்டேயின் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். பிறகு அனன்யா பாண்டே காவல்;நிலையம் சென்று விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். இந்தச் சிக்கல் இன்னும் நீளும் என்று பேசப்படுகிறது. இதனால் விஜய் படத்தில் அனன்யா பாண்டேயை கதைத்தலைவியாக்கும் முடிவை இயக்குனரும், தயாரிப்பாளரும் மறுபரிசீலனை செய்துள்ளனர். 

30,00,000 கிராம் ஹெராயின் கடத்தியது கமுக்கமாகிப் போன நிலையில், 25 கிராம் போதைப் பொருள் வைத்திருந்தது இத்தனை தூரம் கிழித்துக் தோரணம் தொங்கவிடப் படுவதற்கான காரணம். பின்னதை முன்னெடுத்தது கலைஞர்கள். கலைஞர்களிடம் மக்கள் கலையின் உச்சத்தை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். கலைஞர்களிடம் இதுபோன்ற குற்றப்பின்னணி மக்களைப் பெரிதும் பாதிக்கிறது. துருவித் துருவித் ஆராய்கின்றார்கள், தேடித் தேடி படிக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் பேசுகின்றார்கள். ஊடகங்களும் அந்த வகைக்கு இந்தச் செய்திக்கு வெளிச்சம் கூட்டுகின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,044.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.