Show all

அண்ணாமலையும், ரபேல் கடிகாரமும்!

பேரளவாகத் திறனாய்வுக்கு உள்ளாகிவரும், அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் கடிகாரம், கர்நாடகாவை சேர்ந்த குழம்பியக முதலாளி ஒருவர் அண்ணமலைக்குக் கொடுத்தது. ஏன் கொடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை எப்போதும் வேளாண்  குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்வார். ஆனால் தேர்தல் ஆணையத்தில் தனக்கான சொத்து மதிப்பில் அதிக அளவில் நிலங்கள், சில கோடி மதிப்பு கொண்ட சொத்துக்கள் இருப்பதாக இவர் கணக்கு காட்டி இருந்தார். 

இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலையின் கையில் இருக்கும் ரபேல் கடிகாரம் மிகப் பேரளவாகத் திறனாய்வுகளைச் சந்தித்து வருகிறது. அந்தக் கடிகாரத்தின் விலை நான்கரை இலட்சம் ரூபாய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விலையுயர்ந்த கடிகாரம் அவருக்கு எப்படி சாத்தியமாக முடியும் என்பதே சர்ச்சைக்குக் காரணம் ஆகி உள்ளது. 

இத்தனை லட்சம் ரூபாய்க்கு அண்ணாமலை கடிகாரம் வாங்கியது எப்படி. கடிகாரம் வாங்கவே இவ்வளவு காசு இருக்கிறது என்றால், அவரிடம் எவ்வளவு காசு இருக்கும். இவர்தான் ஏழை வேளாண் குடும்பத்தைச் சேர்ந்தவரா? என்ன கதை சொல்கிறாரா? என்றெல்லாம், இணைய ஆர்வலர்கள் பலரும் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக திறனாய்வு செய்து வருகின்றனர். 

இதற்கு அண்ணாமலை அளித்த விளக்கத்தில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன. நான் கட்டி இருக்கும் கடிகாரம் ரபேல் விமான பாகங்களை வைத்து செய்தது. 

இப்படி ரபேல் விமான பாகங்களை வைத்து 500 கடிகாரங்களைச் செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்தக் கடிகாரம் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். 

மேலும் இந்தக் கடிகாரம் வாங்கிய பற்றுத்தாள் என்னிடம் இருக்கிறது. அதை வெளியிடுவேன். அதை வெளியிட்டபின் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வேன், என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். 

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்த திறனாய்வில், பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல் கடிகாரம் வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின பற்றுத்தாளை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால், எளியவர்களும் வாங்கி மகிழலாம். என்று தெரிவித்திருந்தார்.

மேலும், செந்தில் பாலாஜி, வெளிநாட்டு கடிகாரம் கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் கடிகாரம் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய பற்றுத்தாளை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல எக்செல்தாள்  ஏமாத்து வேலை தான் வருமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். 

அண்ணாமலை இப்போது வரை தனது கடிகாரத்தி;ற்கான பற்றுத்தாளை வெளியிடாத நிலையில், திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி வெளியிட்ட கீச்சுவில், கடிகாரம் வாங்கிய பற்றுத்தாளை வெளியிட அண்ணாமலை தயங்க காரணம், கடிகாரம் வாங்கியது ஓரண்டுக்கு முன்பு அல்ல ஆறாண்டுக்கு முன்பு. அது ஒரு கர்நாடகக் குழம்பியக முதலாளி பெயரில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதை வெளியிட்டால் தேர்தல் விண்ணப்பத்தில் இதைக் குறிப்பிடாதது சிக்கலாகிப் போகும் என்கிற காரணம் பற்றியே என்கிறார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,468.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.