Show all

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டு பொன்விழா! இன்று

ஏழு நாடுகள் ஒருங்கிணைந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டு பொன்விழா, இன்று கொண்டாடப்படுகிறது.

16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று கொண்டாடப்படுகிறது! ஏழு நாடுகள் ஒருங்கிணைந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டு பொன்விழா  

அபுதாபி, அஜ்மன், துபாய், புஜய்ரா, சார்ஜா, அம்அல்குவெய்ன், ராஸ்அல்காய்மா ஆகிய ஏழு முடியாட்சி நாடுகள் இணைந்தவை ஐக்கிய அரபு அமீரகம் என்று அழைக்கப்படுகிறது. 

அபு தாபியைத் தலைநகரமாகக் கொண்டிருக்கும் இந்த மண்  எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டு, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் ஏற்றுமதி தொடங்கியபின், அதன் பொருளாதாரம் வெகு துரிதமாய் வளர்ந்து, இன்று உலகிலேயே மிகவும் செல்வச் செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

பழமைவாதம் சார்ந்த சர்வாதிகார ஆட்சியே நடைமுறையில் இருந்தாலும், தொழில் வளர்ச்சிக்கும் வணிகத்திற்கும் ஏற்ற இடமாகத் தன்னை உருவாக்கிக்கொண்டுள்ளது ஐக்கிய அரபு அமீரகம்

குறைந்துவரும் எண்ணெய் வளங்களை ஈடு செய்யும் பொருட்டு, தன்னை உலகின் முதன்மையான ஒரு சுற்றுலா பகுதியாக மறு உருவாக்கம் செய்துகொண்டுள்ளது இந்நாடு. இதில் முதன்மையாகத் திகழ்வது துபாய்.

ஆறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 40,000 மக்கள் மட்டுமே வாழ்ந்துவந்த பாலைவனப் பகுதியான துபாயில், இப்போது 33 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இதில் 31 லட்சம் மக்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருப்பதிலிருந்து, துபாயை உலகளாவிய தொழில் வணிகப்பகுதியாகவும், சுற்றுலா பகுதியாகவும் உருமாற்றி விரிவாக்கியதில், அதன் இப்போதைய அரசர் ஷேக் மொஹமத் அல் மக்தூம் ஆற்றிய பங்கு முதன்மையானது.

இவரது ஆட்சிக் காலத்தில்தான், இன்று துபாயின் அடையாளமாகத் திகழும் உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா, உலகின் மிகப்பெரிய வணிக வளாகமான துபாய் மால், மற்றும் துபாயின் பாதாளத்தொடர்வண்டி சேவை போன்றவை தொடங்கப்பட்டன.

வானளாவிய கட்டடங்களை எழுப்பி, துரித வளர்ச்சி கண்ட துபாயின் கட்டுமானத் தொழிலில், அமர்த்தப்படும் பிற நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் தங்கள் நாடுகளை விட கூடுதல் வருமானம் கிடைப்பதால் தொடர்ந்து இந்த மண்ணை வளப்படுத்த தங்கள் உழைப்பை வழங்கி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமிரகத்தின் பொன்விழா ஆண்டிற்கு முத்தாய்ப்பாக, துபாயில் பன்னாட்டுக் கண்காட்சி, இந்த ஆண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு இன்னும் நான்கு மாதங்கள் தொடரவிருக்கின்றது.

நிலையான வளர்ச்சி, வாகனத் தொழில்நுட்பம், வாய்ப்புகள் ஆகிய முதன்மைத் தலைப்புகளின் கீழ் இந்தக் கண்காட்சி நடக்கிறது. பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம், கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவையும் நிகழ்கின்றன.

இந்திய மதிப்பில் சுமார் 5,24,000 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் இந்தக்கண்காட்சியில், 2.5 கோடி பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்தான் உலகம் திரிபைடைந்த ஒமைக்கரான் குறுவித்தொற்றை எதிர்கொண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பில்லாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,085.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.