Show all

இலங்கை அதிபர் இருநாள் இந்தியப் பயணம், இருநாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பிரதமர் நரேந்திர மோடியை மே 13 இரவு தில்லியில் சந்திக்கவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வரும் சிறீசேனா, மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்ப மேளாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இந்த இறுதி நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

 முன்னதாக, லண்டனில் நடைபெற்று வரும் ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் சிறீசேனா, அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு  வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு வருகிறார். தில்லி ஹைதராபாத் இல்லத்தில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்தளிக்கிறார்.

இதையடுத்து, நடுவண் அரசு ஆதரவுடன் நடத்தப்படும் இந்திய ஃபவுண்டேஷன் அமைப்பு சார்பில்

சிறீசேனா தங்கவுள்ள மௌரியா ஷெராட்டன் ஹோட்டலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னர் சனிக்கிழமை காலை தில்லியில் இருந்து மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் இந்தூருக்கு புறப்படும் அவர், அங்கிருந்து உஜ்ஜைனிக்கு செல்கிறார். அங்குள்ள நினோரா கிராமத்தில் சனிக்கிழமை (மே 14) காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ள வைசரிக் மகா கும்பமேளா (சிம்ஹஸ்த் கும்ப மேளாவின் இறுதி நிகழ்வு) நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறீசேனா கலந்து கொள்கிறார். இந்நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளதால் தில்லியை தொடர்ந்து உஜ்ஜைனியிலும் இரு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.

 இதையடுத்து, சாஞ்சி நகருக்குச் சென்று, அங்குள்ள உலகப் புகழ் பெற்ற சாஞ்சி ஸ்தூபியை சிறீசேனா பார்வையிடுகிறார். இதையொட்டி, இலங்கை மகாபோதி சமூகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் அந்நாட்டினரால் போற்றப்படும் புத்த துறவி அங்காரிகா தர்மபாலாவின் உருவச் சிலையை சிறீசேனா திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில் பங்கேற்றதும் பெங்களூரு சென்று அங்கிருந்து கொழும்புக்கு சனிக்கிழமை இரவே சிறீசேனா புறப்படுகிறார்.

இலங்கை அதிபரின் இரண்டு நாள் இந்திய பயணம், இரு நாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

 உஜ்ஜைனி கும்ப மேளா இறுதி நிகழ்வில், இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவருமான இரா. சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார். மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் விடுத்துள்ள தனிப்பட்ட அழைப்பின்பேரில் சம்பந்தன், மத்திய பிரதேசத்துக்கு வருவதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.