Show all

இடிக்கச் சொன்னது அரசு! ஒரு கோடி செலவு செய்து கட்டிய வீட்டை இடிப்பதா? நகர்த்தி வைத்து விட்டார் காவோயீபிங்

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதிய சாலைப் பணிக்கான இடத்தில் நீங்கள் வீடு கட்டியிருக்கிறீர்கள். அதனால் இழப்பீட்டுத் தொகையை வாங்கிக்கொண்டு, வீட்டை இடித்து விடும்படி கேட்டுக்கொண்டது அரசு. 

ஒரு கோடி செலவு செய்து கட்டிய வீட்டை இடிப்பதா! அதிர்ச்சியடைந்தார் வீட்டு உடைமையாளர் உழவர் காவோயீபிங்.

இழப்பீட்டுத் தொகை எவ்வளவு வரும் என்று தெரியாது. வீட்டை இடித்துவிட்டு, புதிதாக வீடு கட்ட அதிகம் செலவாகும். உழைப்பு, நேரம், பணம் அத்தனையும் வீணாவதில் அவருக்கு விருப்பம் இல்லை. வீட்டை இடிக்காமல் என்ன செய்யலாம் என்று யோசித்தார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, காவோவின் நண்பர் ஒருவர், வீட்டை இடிக்காமல் நகர்த்தி வைக்கும் நிறுவனத்தின் முகவரியைக் கொடுத்தார். காவோவுக்கு நம்பிக்கை வந்தது. உடனே அவர்களைத் தொடர்புகொண்டார். மூன்று மாடி கட்டிடம் என்பதால் அந்த நிறுவனம் அதிக தொகையைக் கட்டணமாகக் கேட்டது. அரசாங்கத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையாகச் சுமார் 40 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

அதனால் கட்டிடம் நகர்த்தும் நிறுவனம் கேட்கும் தொகையைக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்தார். கட்டிடத்தை நகர்த்தும் பணி தொடங்கியது. முதலில் கட்டிடம் நகர வேண்டிய இடத்தைச் தூய்மை செய்தனர். ஆயிரம் மரக்கட்டைகளைக் கொண்டு வந்தனர். கட்டிடத்தைச் சுற்றி மண்ணைத் தோண்டினர்.

இழுவை இயந்திரங்களை வைத்து கட்டிடத்தை இழுக்க தொடங்கினர். எதிர்பார்த்ததை விடக் கட்டிடம் எடை அதிகமாக இருந்தது. 1000 டன் கட்டிடத்தை இழுக்கத் தாங்கள் கேட்ட தொகையை விட அதிகம் வேண்டும் என்றது நிறுவனம். வேறு வழியின்றி காவோவும் ஒப்புக்கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிடம் நகர ஆரம்பித்தது. 40 மீட்டர் தூரத்தை ஒன்றரை மாதங்களில் வெற்றிகரமாகக் கடந்தது. நிறுவனத்துக்கு 22.75 லட்சம் ரூபாயைக் கொடுத்தார். கீழ்த் தளத்தில் மட்டும் மறுசீரமைப்புப் பணி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக 11 லட்சம் ரூபாய் செலவு செய்தார்.

என்னுடைய கனவு இல்லத்தைத் தகர்க்க வேண்டும் என்று சொன்னபோது நான் உடைந்துபோனேன். ஒரு கோடி ரூபாய் செலவு செய்து, உருவாக்கிய வீடு. ஆனால் இழப்பீடு 40 லட்சம்தான் கிடைக்கும். நல்லவேளை, வீட்டை நகர்த்தும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எல்லா செலவுகளும் போக இழப்பீட்டுத் தொகையில் 6 லட்சம் ரூபாய் எனக்கு மிச்சமாகியிருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அரசாங்கத்திடமிருந்து 70 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைத்துவிட்டது.

அதனால் எனக்கு 36 லட்சம் ரூபாய் லாபம். அத்துடன் என் கனவு இல்லம் முழுமையாகக் கிடைத்துவிட்டது. என்றார் மகிழ்ச்சியில் உழவர் காவோ. இது நடந்தது சீனாவில் ஜியான்சி மாகனத்தில்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,747. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.