Show all

மலேசியா துணை முதல்வரின் தெளிவான- விரிவான- அழகான- விளக்கம்! தமிழக அரசியலை ஆட்கொள்ள ஆன்மிகம் போதாது

19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் மூலம், தமிழகத்து அரசியலை ஆட்கொள்ள முடியாது என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார்.

      இதுதொடர்பாக அவரது பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் தெளிவான- விரிவான- அழகான- விளக்க அறிக்கை ஒன்றை ராமசாமி வெளியிட்டுள்ளார். அதில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அவர் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பான பேராசிரியர் ராமசாமியின் அறிக்கை: கடந்த இருபது ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது, விரைவில் நனவாகவுள்ளது. தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார், திரைப்பட்ட நட்சத்திரம் ரஜினிகாந்த், தாம் அரசியல் கட்சி தொடங்கி வரவிருக்கிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் திரைத்துறையில் இருந்து சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ரஜினிகாந்த். அவற்றில் பல வெற்றிப்படங்கள். ரஜினியின் கபாலி திரைப்படம், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து தமிழர்களிடம் பாராட்டை பெற்றதோடு, 100 மில்லியன் மலேசிய ரிங்கிட்டுக்கு மேல் வசூலை குவித்தது. இந்தியாவின் அதிகம் ஊதியம் வாங்கும் நடிகரில் ரஜினி ஒருவர். தமிழகத்தின் சென்னையில் இருந்துதான் இவர் இந்த புகழை அடைந்தார். சுமார் இருபது ஆண்டுகளாக அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்ற இழுபறியான நிலையில் இருந்த ரஜினி, இறுதியாக, அரசியல் நிலையற்றத்தன்மையை மாற்றி தமிழகத்தை காப்பாற்ற அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

அது என்ன ஆன்மீக அரசியல் தனது உரையில், தமிழ்நாட்டு அரசியலின் நிலைக்கு காரணம் தமிழ்நாட்டை ஆண்டு வந்த இரு திராவிட கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகம், மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். சுயநலமில்லா தமது தொண்டர்களின் உழைப்பில், ஒரு புதிய அரசியல் மாற்றத்தை தனது கட்சி ஏற்படுத்தும் என்ற ரஜினியின் பேச்சு,

இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகம் எங்கிலும் ஊடகங்களின் தலைப்புசெய்தியாக வெளிவந்தன. தனது அரசியல் பயணம் சாதி, மத பேதமற்ற ‘ஆன்மிக அரசியல் என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி, தமிழகம் உட்பட்ட தென்னிந்திய மாநிலங்களில் தனது இருப்பை நிலைக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளிவந்துள்ளது திட்டமிடப்பட்டதா, அல்லது எதேட்சையாக நடந்ததா என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் வேருன்ற, பாஜக-விற்கு தமிழகத்தில் கூட்டணி நண்பர்கள் வேண்டும் என்பது பரவலான கருத்தாக இருக்கின்றது. ரஜினியும், பாஜகவும் கூட்டணி சேர்வார்களா என்பது, போக, போகத்தான் தெரியும். பாஜக முன்னெடுத்து செல்லும் மதவாத அரசியலும், ரஜினி முன்வைக்கும் ‘ஆன்மிக அரசியலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதேவேளையில், அரசியல் அனுபவம் குறைவான, தமிழரல்லாத ரஜினி, ஒரு கட்டத்தில் பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ரஜினி, தமிநாட்டை சேர்ந்தவரல்ல, அவர் ஒரு தமிழரும் அல்ல. கர்நாடகாவில் ஒரு பேருந்து நடத்துனராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, தமிழ்நாட்டுக்கு வந்து திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரை பதித்துள்ளார். தமிழ் திரையுலகின் ஒரு சிறந்த நடிகர் ரஜினி. உலகமெங்கிலும் இரசிகர்களை கொண்டுள்ளார். உலகின் பல நாடுகளிலும் ரஜினியின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மலேசியாவில் படமாக்கப்பட்ட ‘கபாலி போன்ற திரைப்படங்கள், தமிழர் அல்லாதோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவ்வாறு

மலேசிய பிரதமர் நஜீப் ராசாக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தால்தான், தனது அண்மைய இந்தியப் பயணத்தின் போது, அவர் ரஜினியை அவரது இல்லத்திலேயே சென்று சந்தித்தார்.

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழர் அல்லாதோர் ஆட்சிக்கு வரமுடியும் போல. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. திரைதுறையிலிருந்து அரசியலுக்கு சென்று தடம் பதித்த, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜி இராமச்சந்திரன், ஒரு தமிழரல்ல. அவரின் பூர்வீகம் கேரளா. ஆனால், தம்மை ஒரு தமிழனாகவே எம்ஜிஆர் பாவித்துக்கொண்டார். தமிழ் மொழியை சரளமாக பேசிய அவர், இலங்கையில் நடந்த தமிழர்களின் தேசிய போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தார். தமிழ் திரைத்துறையிலிருந்து வந்து தமிழகத்தின் அரசியலில் தடம்பதித்த மற்றொருவர்,

எம்ஜிஆரின் வழிவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எம்ஜிஆர் மரணமடைந்த பிறகு, ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். ஜெயலலிதா, கர்நாடகாவை சேர்ந்த தமிழர். பல திரைப்படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதா, பிறகு அவரின் அரசியல் வாரிசாகவே ஆனார். தொடக்கத்தில், ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் அக்கறையில்லாமல் இருந்த ஜெயலலிதா, தமிழர்களுக்கு எதிராக நடந்த அநீதிகளைக் கண்டு தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டார். தமிழகத்தின் அரசியலில், திரைத்துறை அனுபவம் என்பது முக்கியமான ஒன்றாகி விட்டது. அதற்கு, எம்ஜிஆரும், ஜெயலலிதாவுமே நல்ல சான்றுகள். அந்த இரு முன்னாள் முதல்வர்களைப் போன்றே, ரஜினிக்கு பலமான திரைத்துறை அடித்தளம் இருக்கின்றது. தமிழ் திரைத்துறையில் மிகவும் உன்னிப்பாக பணியாற்றி தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துள்ளார் ரஜினி. ஆனால், திரைத்துறையில் வெற்றி என்பது, அரசியலில் நிச்சயம் வெற்றியை ஈட்டித்தரும் என்று கூறிவிட முடியாது. தமிழ்நாட்டு அரசியல் அவ்வளவு எளிதான அரசியலும் அல்ல. கற்பனை கலந்த திரைத்துறையின் தோற்றத்தை, அரசியல் நிதர்சனமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை, அண்மைய சில நிகழ்வுகள் தெளிவுப்படுத்துகின்றன.

ரஜினி ஒரு தமிழரல்ல, அவருக்கு தமிழ் மொழியில் ஆற்றல் இல்லை என அவரின் அரசியல் எதிரிகள் அவரை குறைசொல்லக்கூடும். தமிழர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளும் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது மற்றொரு பலவீனமாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில், தமிழர்கள் மீது பலவேறான அராஜகங்கள் கர்நாடகாவின் இனவாத அமைப்புகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழகத்தின் தமிழர்கள், அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களை ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று அரவணைக்கும் போது, அதுபோன்ற வரவேற்பை தமிழர்கள் கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களில் எதிர்பார்க்க முடியாது.

பிரபலத்திற்காகவும், பொருளாதார நோக்கங்களுக்காகவும், ரஜினி தன்னை ஒரு தமிழர் என்று நினைத்துக்கொள்கிறார், காட்டிக்கொள்கிறார். தனது சொந்த மாநிலத்தில் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்களை ரஜினி கண்டித்ததில்லை. இலட்சக்கணக்கான தமிழர்கள் அண்டை நாட்டில் கொன்று குவிக்கப்பட்ட போதும், ரஜினி அவர்களுக்காக ஒரு குரல் கூட கொடுக்கவில்லை. திரைப்படங்களில் காணும் ரஜினி, நிஜத்தில் அப்படி இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்தியாவாகட்டும், இலங்கை ஆகட்டும், தமிழர்களுக்கு எதிரான பல்வேறு விவகாரங்களில், சந்தர்ப்பவாத நிலைப்பாடடையே ரஜினி கடைபிடித்துள்ளார் தமிழர்களுக்கு பாதிப்பு என்றால் மௌனமாகி விடுகிறார் தமிழர்களிடமிருந்து கோடிகளை குவித்த ரஜினி, அந்த தமிழர்களுக்கு பாதிப்பு என்று வரும் பொழுது ஏன் மௌனமாகி விடுகின்றார் என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக இருந்து வருகின்றது.

தமிழர்களின் அன்பும், அபிமானமும், ரஜினியால் மதிக்கப்படுகின்றனவா என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது. அரசியல் பிரவேசம் என்பது ரஜினியின் ஜனநாயக உரிமை என்றாலும், ஜனநாயகத்தை மீட்டெடுக்க, ஆன்மிகம் மட்டும் போதாது. தமிழகத்தின் அரசியலை ரஜினி குறைத்து மதிப்பிட்டு விட்டாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு திரைத்துறை விளம்பரத்தை தாண்டிய ஒரு ஆளுமை வேண்டும். அந்த அரசியல் ஆளுமையை ரஜினி எப்படி பெறப்போகின்றார் என்பதை காத்திருந்துதான் பார்க்கமுடியும். ஊழல்

இரு திராவிட கட்சிகளின் ஆட்சியில் பல்லாண்டு காலம் இருக்கும் தமிழ்நாட்டுக்கு, ஊழலற்ற, ஒரு ஒழுக்கம் மிகுந்த அரசியல் வேண்டும் என்ற ரஜினியின் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால், அந்த அரசியல் ரஜினி கூறும் ‘ஆன்மிக அரசியலா என்பதுதான் கேள்வி.

எதனை ஆன்மிக அரசியல் என்று ரஜினி கூறுகின்றார் என்று தெரியவில்லை. வரும் நாட்களில் அதனை அவர் விளக்குவார் என்று எதிர்பார்த்தாலும், அவரின் கூற்று தற்பொழுதைக்கு ஒரு வெற்று வாசகமாகவே நோக்கப்படுகின்றது. மதவாத சாயத்திலிருந்து ரஜினி எப்படி மீளப்போகின்றார் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. தனது வாழ்வில் ஆன்மிகத்தை கடைபிடிப்பவராக ரஜினி இருக்கலாம். ஆனால், அந்த ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில், தமிழர்கள் அரசியல் மாற்றத்துக்கு வித்திடுவார்கள் என்பது நமட்டு ஆசையாகவே இருக்கும்.

தற்பொழுது, பாஜகவுடனோ, இந்துத்துவ அமைப்புகளுடனோ, ரஜினிக்கு தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அந்த மதவாத ஆன்மிக வழியை அவர் கையிலெடுக்கலாம். இந்தியாவின் வரலாற்றில், இந்து மதத்திற்குள்ளேயே பல பிரிவுகள், இஸ்லாம், கிருத்துவம் என்ற அன்னிய மதங்களும் கலந்துள்ளன. இந்நிலையில், எப்படி ரஜினியும் அவரது ஆதரவாளர்களும் தங்களது ‘ஆன்மிக அரசியல் எடுபடுமென்று நினைக்கின்றனர்? அரசியல் ஆசையில், எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் ஆட்சியமைக்கலாம் என்று ரஜினி கணக்கிட்டிருந்தால், அது தப்பு கணக்காகவே இருக்கும்.

பாஜக-வாகட்டும், காங்கிரஸ் கட்சியாகட்டும், தமிழர்களின் உணர்வுகளை, உரிமைகளை சிறுமைபடுத்தும் எந்தவொரு முயற்சியையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்! என்று அந்த முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,656

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.