Show all

இலங்கை ராணுவப் போர்க்குற்றங்களை உள்நாட்டு விசாரணை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால்...

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை உண்மை என உள்நாட்டு விசாரணை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால், ராஜபட்சே பொன்சேகா, சிறீசேனா உள்ளிட்டோரை இனப்படுகொலை மற்றும் சர்வதேச போர்க்குற்றவாளிகளாக ஐ.நா. பிரகடனப்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ராஜபட்சே ஆட்சிப் பொறுப்பில் இருந்த 2013-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான விசாரணைக் குழு அறிக்கை, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ராஜபட்சேவால் நியமிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டு பிரதிநிதிகளைக் கொண்ட விசாரணை ஆணையம், இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உண்மைதான் என பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும், சேனல் 4-ல் வெளியான ஆவணப்பட காட்சிகள் அனைத்தும் உண்மை என்கிறது.

மேலும் இறுதி யுத்தத்தில் வௌ;ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்தது குறித்து தனி விசாரணையே நடத்த வேண்டும் என்றும், சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட ஒரு உள்நாட்டு விசாரணை ஆணையமே இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை ஒப்புக்கொண்டு, இலங்கை நாடாளுமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே ராஜபட்சே, பொன்சேகா, சிறீசேனா உள்ளிட்டோரை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றவாளிகளாக ஐக்கிய நாடுகள் அவை பிரகடனம் செய்து, சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற வழக்குத்தொடர வேண்டும் என்று உலகத் தமிழினம் வேண்டி கேட்டுக் கொள்கிறது. மேலும் நடுவண் அரசும் சர்வதேச நீதிமன்றத்தில் இப்பிரச்னையை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.