Show all

காட்டலோனியாவை விடுதலை பெற்ற நாடாக காட்டலோனியா பாராளுமன்றம் அறிவித்தது

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாநிலமாக காட்டலோனியா திகழ்கிறது. இதன் தலைநகரமாக பார்சிலோனா விளங்குகிறது. வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான பகுதி, காட்டலோனியாதான். ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 விழுக்காடு பேர் இங்கு வாழ்கிறார்கள். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 விழுக்காடு பங்களிப்பை இந்த மாநிலம் தான் செய்கிறது. ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் காட்டலோனியாவின் பங்கு 19 விழுக்காடு ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அன்னிய நேரடி முதலீட்டில் 20.7 விழுக்காடு இந்த மாநிலத்துக்குப் போகிறது.

அங்கு கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் தலையெழுத்தை தாங்களே நிர்ணயித்துக்கொள்வதற்காக சுய நிர்ணய அதிகாரம் (தனி நாடு) வேண்டும் என்ற உணர்வு தலைதூக்கி வந்தது.

இந்த நிலையில் ஸ்பெயினில் இருந்து தனி நாடாக வேண்டுமா அல்லது ஸ்பெயினுடன் இணைந்தே இருக்கலாமா என்பது பற்றி பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த அந்த மாநில அரசு முடிவு செய்தது. ஆனால் இதை ஸ்பெயின் அரசு அங்கீகரிக்கவில்லை.

அதை மீறி இம்மாத தொடக்கத்தில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பொதுவாக்கெடுப்பை முறியடிப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். காவல்துறையினரின் நடவடிக்கையை அமைதியான முறையில் எதிர்க்குமாறு தனிநாடு ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் காவல்துறையினர் ஓட்டுப்பெட்டிகளையும், வாக்குச்சீட்டுகளையும் கைப்பற்றத் தொடங்கி உள்ளதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் கூறியது.

ஆனாலும் வாக்காளர்கள் எந்தவொரு வாக்குச்சாவடிக்கு சென்றும் வாக்கு அளிக்கும் உரிமையை காட்டலோனியா மாநில அரசு வழங்கியது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்றில், காட்டலோனியா தனி நாடு ஆவதை ஆதரிப்பவர்களும், மற்றொன்றில் தனிநாடு எதிர்ப்பாளர்களும் ஓட்டு போட்டனர்.

வாக்கு எண்ணிக்கையில் 90 விழுக்காடு மக்கள் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர் என காட்டலோனியா தனிநாடு ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காட்டலோனியா அரசின் நடவடிக்கையினால் ஸ்பெயினில் கடும் விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில், ஸ்பெயின் அரசின் உத்தரவுகள் எங்களை கடுப்படுத்ததாது என தெரிவித்த கார்லஸ், காட்டலோனியா விடுதலை பிரகடனத்தில் மட்டும் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து காட்டலோனியாவின் தன்னாட்சி அதிகாரத்தை பறிப்பது தொடர்பாக ஸ்பெயின் பாராளுமன்றம் நடவடிக்கையை தொடங்கியது.

இந்நிலையில் ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற்றதாக காட்டலோனியா பாராளுமன்றம் அறிவித்து உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.