Show all

சீனாவுக்கு எதிர்நிலை பேணிவரும் ஒன்றிய பாஜக அரசு அங்கீகரிக்குமா தைவானை!

உலக அளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே தைவானை அங்கீகரித்திருக்கின்றன. இந்தியா உள்பட்ட பெரும்பாலான நாடுகள் தைவானை இறையாண்மை கொண்ட நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. அண்மைக்காலமாக தைவானுக்கு எதிராக சீனா முன்னெடுத்து வரும் நெருக்கடிகள் மிகுக்கப்பட்டு வருகின்றன.

25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: 'நாம் அதிகம் சாதிக்க, சாதிக்க சீனாவிடம் இருந்து வரும் அழுத்தம் அதிகமாகும்' என்று- 
'சீனாவுடன் தைவானின் மறு இணைப்பு நிச்சயம் நடக்கும்' என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசிய மறுநாளே தைவான் அதிபர் சாய் இங்-வென்;, ஞாயிறன்று நடந்த தைவானின் தேசிய நாள் உரையில் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே தைவானை அங்கீகரித்திருக்கின்றன. இந்தியா உள்பட்ட பெரும்பாலான நாடுகள் தைவானை இறையாண்மை கொண்ட நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை.

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகளில் ஒன்றான சீனா, அப்போதைய அதன் கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஒப்புதலுடன் தைவானை ஆளத் தொடங்கியது.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் சீனாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது, அப்போதைய தலைவர் சியாங் காய்-ஷேக்கின் துருப்புக்கள் மாவோ சேதுங்கின் கம்யூனிஸ்ட் படைகளால் விரட்டி அடிக்கப்பட்டன.

சியாங் மற்றும் அவரது குவோமிண்டாங் அரசைச் சேர்ந்தவர்கள் இந்திய விடுதலைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில், தைவானுக்கு தப்பிச் சென்றனர். இந்தக் குழு பெரும்பரப்பு சீனக் குழு என்று அழைக்கப்பட்டது. அப்போது இதில் 15 லட்சம் பேர் இருந்தனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 14 விழுக்காடு என்றாலும், பல ஆண்டுகளாக தைவானின் அரசியலில் இந்தக் குழுவினர் ஆதிக்கம் செலுத்தினர்.

சர்வாதிகார ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதால், சியாங்கின் மகன் சியாங் சிங்-குவோ தைவானில் மக்களாட்சிப் படுத்தும் நடைமுறையைத் தொடங்கினார்.

தைவானின் 'மக்களாட்சியின் தந்தை' என்று அழைக்கப்படும் அதிபர் லீ டெங் கூய், அரசியலமைப்பு மாற்றங்களை முன்னின்று செய்தார். கடந்த இருபத்தியோர் ஆண்டுகளாக தைவானில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது.

தைவானை எளிதில் வீழ்த்தக் கூடிய பகுதியாகப் பார்க்கிறது சீனா. ஆனால் தைவானோ, தனி அரசியலமைப்புச் சட்டம், படைத்துறை, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டிருப்பதால் தன்னை ஒரு தனி நாடாக பறைசாற்றிக் கொள்கிறது.

தைவானின் அரசு சட்டவிரோதமானது என்று சீனா கூறுவதால், அதிகாரப்பாடான கலந்துரையாடல்கள் எதுவும் நடப்பதில்லை என்றாலும், அதிகாரப்பாடற்ற முறையில் பேராளர்களின் சந்திப்பு நடைபெற்றிருக்கின்றன.

ஐந்து ஆண்டுகளுக்குப் முன்பு, தைவானின் தற்போதைய தலைவர் சாய் இங்-வென் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஜனநாயக முன்னேற்றக் கட்சி, சீனாவில் இருந்து பிரிந்து செல்வதை தீவிரமாக வலியுறுத்துகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தைவானை சீனாவின் ஒரு பகுதியாக தங்கள் வலைத்தளங்களில் பட்டியலிடும்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு சீனா அழுத்தம் கொடுத்தது. அதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், சீனாவில் இயங்க முடியாது என்றும் அச்சுறுத்தியது.

கடந்த ஆண்டில் சாய் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். அந்த நேரத்தில் ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இது தைவானிலும் கவனிக்கப்பட்டது.

தைவான் அதிபர் சாய் இங்-வென் கட்சி சீனாவில் இருந்து பிரிந்து செல்வதை தீவிரமாக வலியுறுத்துகிறது.

அதே நேரத்தில், அமெரிக்கா தைவானுக்கான தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு வெளியுறவுத்துறை உயர் அதிகாரியை தைவானுக்கு அனுப்பியது.

இந்தப் பயணத்தை சீனா கடுமையாக விமர்சித்தது, சீனா-அமெரிக்க உறவுகளுக்கு கடுமையான பாதிப்பை தவிர்க்க வேண்டுமானால், தவறான சமிக்ஞை எதையும் அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்தது.

இந்த ஆண்டில் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் தைவான் பாடுகளில் அமெரிக்காவின் உறுதி, திடமானது என்று கூறியுள்ளது.

சீனா தைவானை ஒரு பிரிந்த மாநிலமாகக் கருதுகிறது. தேவைப்பட்டால் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறது. ஆனால் தைவானின் தலைவர்கள் இதை ஏற்கவில்லை. தைவான் ஓர் இறையாண்மை கொண்ட நாடு என்று வாதிடுகின்றனர்.

தைவான் தனக்கென ஓர் அரசியல் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், படைகளில் சுமார் 3 லட்சம் வீரர்களைக் கொண்டிருக்கிறது.

சியாங் காய்-ஷேக்கின் சீனக் குடியரசு அரசு, 72 ஆண்டுகளுக்கு முன்பு தைவானுக்கு தப்பிச் சென்றது. தாங்களே ஒருங்கிணைந்த சீனா என்று அறிவித்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் சீனாவின் இடத்தைப் பிடித்தது. பல மேற்கத்திய நாடுகளால் ஒரே சீன அரசாங்கமாகவும் அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் அவை பெய்ஜிங்கில் இருந்து இயங்கும் சீன அரசுக்கு அங்கீகாரத்தை மாற்றியது. தைவானில் இருந்து இயங்கும் அரசு வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு தைவானில் இருக்கும் அரசை அதிகாரப்பாடாக அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை சுமார் 15 ஆகக் குறைந்தது.

இந்த இரண்டு நிலைப்பாட்டுக்கும் இடையே பெரும் பிளவு இருப்பதால், பெரும்பாலான பிற நாடுகள் தற்போதைய தெளிவற்ற தன்மையை அப்படியே ஏற்றுக் கொண்டு திருப்தியடைகின்றன. இதனால் அங்கீகாரம் கிடைக்காவிட்டால்கூட, ஒரு விடுதலை அரசின் அனைத்துப் பண்புகளையும் தைவான் கொண்டுள்ளது

இந்தியா தைவானை இறையாண்மை கொண்ட தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு தைவானின் அதிபராக சாய் இங்-வென் தேர்வு செய்யப்பட்டபோது, பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மீனாட்சி லேகி, ராகுல் கஸ்வான் ஆகிய இருவரும் காணொளி மூலம் அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

மக்களாட்சி, விடுதலை, மனித உரிமை ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளும் இணைந்திருப்பதாக தங்களது வாழ்த்துச் செய்தியில் அவர்கள் கூறினர். இதுதான் இந்தியாவின் தைவானுடனான நடப்பு நிலைமை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,033.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.