Show all

துபாயில் ஸ்டாலின்! தமிழ்நாட்டில் 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9700 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வகைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் அரசு முறைப் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
 
13,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன், தமிழ்நாட்டில் 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9700 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம், மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் அரசு முறைப் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அந்தப் பயணத்தில் சனிக்கிழமையன்று, முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர் அமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் சிறப்புகளையும், தமிழ்நாட்டில் சிறந்த தொழில் சூழல் நிலவுவதையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு அமைப்பின் உறுப்பினர்களுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் முன்னிலையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

துபாயைச் சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம் ரூ.500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், 3 ஆண்டுகளில் ரூ.150 கோடி முதலீட்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்திலும், 5 ஆண்டுகளில் ரூ.350 கோடி முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத்திலும் என இரு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஏ.மொகம்மது இல்யாஸ் கலந்து கொண்டார்.

துபாயைச் சேர்ந்த டிரான்ஸ்வேல்டு குழுமம் ரூ.100 கோடி முதலீடு மற்றும் 1,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் உணவுப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

மற்றொரு நிகழச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் முதல்வர் முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் அமைப்பு ரூ.500 கோடி முதலீடு மற்றும் 3,500 பேர்களுக்கு வேலைவாய்ப்பு (3000 பேர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் 500 பேர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு) என்ற வகையில், 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் அமைப்பின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆசாத் மூப்பன் கலந்து கொண்டார்.

செராப் குழும நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு மற்றும் 1,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், இருப்புப்பாதை இணைப்பு வசதியுடன், ஒரு சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைத்திடுவதற்காக, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இக்குழுமத்தின் துணைத் தலைவர் எச்.இ. மேஜர் ஜெனரல் (ஓய்வு) செராப் புதின் செராப் மற்றும் அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சியாம் கபுர் இதில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மொத்தம் ரூ 2,600 கோடி முதலீடு மற்றும் 9,700 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,200.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.