Show all

இலங்கை அரசு எதிர்ப்பு! மோடிக்கு- ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மடல் அனுப்பி உள்ளமைக்கு

இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவித்து வருகிறது. இந்தியா பல்வேறு பொருளாதார உதவிகளை இலங்கை அரசுக்கு செய்து வருகிறது. இந்தச் சூழலில், ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள்- இந்தியாவிடம் தங்கள் சிக்கல்களுக்கும் தீர்வு வேண்டி முறையிட்டு இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு மடல் எழுதியுள்ளனர்.

06,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஈழத் தமிழர் அரசியல் அதிகாரப் பகிர்வு விடையத்தில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் மடல் அனுப்பி உள்ளதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா இடையே இந்தியா- இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையின் அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகளாகியும் இந்த வகைமை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் தங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும் என ஈழத் தமிழ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்தியத்தலைமைஅமைச்சர் மோடிக்கு ஈழத் தமிழ் தலைவர்கள் மடல் அனுப்பி உள்ளனர். இம்மடல் கொழும்பில் இலங்கைக்கான இந்திய தூதரிடம் நேற்று வழங்கப்பட்டது.

ஈழத் தமிழ் தலைவர்களின் இந்த முயற்சிக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் உதய கம்மன்பில கூறியதாவது: இலங்கை ஒன்றும் இந்தியாவின் மாநிலம் அல்ல. நாங்கள் ஒரு தனிநாடு என்பதை மறந்துவிடக் கூடாது.

தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசுடன்தான் பேச வேண்டும். இலங்கையுடன் பேசாமல் வேறு எங்கு போய் பேசினாலும் எந்தப் பயனும் ஏற்படாது. அதனால் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு தமிழ் தலைவர்கள் மடல்; எழுதியது குறித்து எங்களுக்கு எந்த கவலையுமே இல்லை. உதய கம்மன்பில கெத்து காட்டியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,133.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.