Show all

பயன்படுத்துமா இந்திய அரசு! கொரோனா நிதியாக கிடைத்துள்ள ரூ.7,400 கோடி மதிப்புக்கு சிபாஇனு குறளிச்செலாவணி

விடாலிக் புட்டரின் என்கிற 27 அகவை உருசியர், 193 நாட்களுக்கு முன்பு அன்றைய நாளில், ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான சிபா இனு குறளிச்செலாவணியை சந்தீப் நயில்வால் என்கிற குறளிச்செலாவணி தொழில்முனைவோரின், இந்தியா கோவிட் நிவாரண நிதிக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். 

06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா கொரோனா குறுவி இரண்டாம் அலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, உலக அளவில் பல நாடுகளும் இந்தியாவுக்கு உதவ முன்வந்தன. அவர்களோடு பல தனிமனிதர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள்.

விடாலிக் புட்டரின் என்கிற 27 அகவை உருசியர், 193 நாட்களுக்கு முன்பு அன்றைய நாளில், ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான சிபா இனு குறளிச்செலாவணியை சந்தீப் நயில்வால் என்கிற குறளிச்செலாவணி தொழில்முனைவோரின், இந்தியா கோவிட் நிவாரண நிதிக்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். 

இந்த உருசிய இளைஞர்- இதரெம் என்கிற உலகப் பேரறிமுகமான குறளிச்செலாவணியை நிறுவியவர்களில் ஒருவர். கடந்த பத்து ஆண்டுகளாக குறளிச்செலாவணி துறையில் செயல்பட்டு வருகிறார். உலக அளவில் குறளிச்செலாவணிக்காக பேரறிமுகமானவர்களில் இந்த 27 அகவை பில்லியனரும் ஒருவர்.

இந்த சிபா இனு குறளிச்செலாவணி மிக அண்மையில்தான் வசிர்எக்ஸ் என்கிற இந்தியாவின் மிகப் பெரிய குறளிச்செலாவணி சந்தையில் பட்டியலிடப்பட்டது. தற்போதைக்கு குறளிச்செலாவணிகளிலேயே மிகக் குறைந்த விலையுள்ள காசு இந்த சிபாஇனுதான். ஒரு சிபாஇனுவின் இந்த வினாடியின் விலை: ரூபாய் 0.003512 மட்டுமே. இந்திய ஒரு ரூபாய்க்கு 285 சிபாஇனு காசுகள் வாங்கலாம். அடுத்த வினாடியில் இந்த சிபா இனுவின் விலை என்னவாக இருக்கும் யாருக்கும் தெரியாது. 

இவ்வளவு குறைந்த விலை காரணமாக இந்த சிபா இனுவை மிகுதியாக வாங்குவதும், பல்வேறு நன்கொடைகளுக்குப் பயன்படுத்துவதும், பல்வேறு விளம்பரத் தளங்களின் கொடுப்பனவுகளுக்கும், மிகுதியாகக் கொண்டாடப்பட்டும் விளம்பரப்படுத்தப்பட்டும் வருகிறது. 

விடாலிக் புட்டரின் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான சிபா இனு காசுகளை நன்கொடையாகக் கொடுத்த நாளில் அதன் விலை ரூபாய் 0.001463 ஆகும். தற்போது சிபா இனுவின் விலை இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த மாதத்தில் எட்டு ஒன்பது மடங்குக்கு அதிகரித்து வந்திருந்தது இந்தச் சிபாஇனு. 

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி இதுநாள் வரை இந்தியாவில் குறளிச்செலாவணிக்கு ஆதரவான நிலையை எடுக்கவில்லை. குறளிச்செலாவணி திடீரென விலை அதிகரிப்பதையும், சடாலென விலை வீழ்வதையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு கருதி இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி குறளிச்செலாவணிகளை அனுமதிப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் செயல்படும் வங்கிகள் குறளிச்செலாவணிகளோடு வணிகம் மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்தது இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி. அதை எதிர்த்து குறளிச்செலாவணி சந்தைகள் உச்ச அறங்கூற்றமன்றத்தை நாடின. தீர்ப்பு குறளிச்செலாவணி சந்தைகளுக்குச் சாதகமாக வந்தது.

தற்போது இந்தியாவில் சுமார் 1 கோடி பேர் குறளிச்செலாவணிகளில் முதலீடு செய்வதாகவும், அவர்கள் முதலீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 100 பில்லியன் ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

குறளிச்செலாவணிக்கு ஆதரவாக உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தாலும், இந்தியக்கட்டுப்பாட்டு வங்கியிடம் இருந்து குறளிச்செலாவணி தொடர்பாக எந்த ஒரு தெளிவான உத்தரவுகளும் வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை என்பதால், சிபாஇனுவாக கிடைத்த இந்தக்  கொரோன நன்கொடையை இந்தியா வங்கிகள் மூலமாக இந்தியா மாற்றிக் கொள்ள முடியாது.

ஒருவேளை இந்திய அரசு இந்த சிபா இனு காசு நன்கொடையை இந்தியப் பணமாக மாற்றிக் கொள்ள  வேண்டும் என்று விரும்பினால், மாற்றிக் கொள்வது மிக எளிதே!

அரசுக்கு ஒரு குறளிச்செலாவணி கணக்கு இருந்தால் போதும். எனவே முதலில் இந்திய அரசுக்கு என்று தனியாக ஒரு குறளிச்செலாவணி கணக்கு தொடங்கப்பட்டால், விடாலிக் நன்கொடையாகக் கொடுத்த க்ரிப்டோ காசுகள் அக்கணக்குக்கு வந்துவிடும். அதன் பின், எப்போது சிபா இனு காசுகளை வாங்க ஆட்கள் கிடைக்கிறார்களோ அப்போதைய விலைக்கு விற்று இந்திய அரசு இந்திய ரூபாயாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு இந்திய அரசு மனது வைக்க வேண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,075.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.