Show all

மீண்டும் அகதிகளாக தமிழ்நாட்டை நோக்கி ஈழத்தமிழர்கள்! முன்பு இனப்போர் பாதிப்பில்- தற்போது பொருளாதாரச் சீரழிவில்

முன்பு இலங்கையில் சிங்களப் பேரினவாதிகள் இனப்போரை முடுக்கியதைத் தொடர்ந்து அகதிகளாக தமிழ்நாட்டை எதிர்நோக்கிய ஈழத்தமிழர்கள்- தற்போது நிருவாகத் திறமையற்ற ஆட்சியாளர்களின் பொருளாதாரச் சீரழிவில் அகதிகளாக தமிழ்நாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய இலங்கை தமிழர்கள் எதிர்பார்ப்பு:
   
அகதிகள் முகாமில் வசிக்கும் நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. குடியுரிமை இல்லாததால் எங்களுக்கு எல்லைகடவு வழங்கவில்லை. முப்பது ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வசிப்போருக்கு குடியுரிமை வழங்கப்படுமா? என்பதாகும். 

இலங்கையில் சிங்களப் பேரினவாதிகள் இனப்போரை முடுக்கியதைத் தொடர்ந்து அங்கிருந்து ஏராளமானோர்- விடுதலைப்புலிகள் எழுச்சி கொள்ளும் வரையிலும்- அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து வந்துகொண்டு இருந்தனர். அவர்களுக்கு இங்குள்ள அரசுகள் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு கல்வி உரிமை மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் தங்கி வசித்து வருகிறார்கள்.

இலங்கையில் போரை, உலகநாடுகள் ஒத்துழைப்போடு,  ஒன்னரை இலட்சம் தமிழர் அழிப்பில், முடிவுக்கு வந்தது சிங்களப் பேரினவாத அரசு. இந்த நிலையில் பலர் சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பமில்லாமல் இங்கேயே இருக்க நினைக்கிறார்கள். 

அவ்வாறு தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் பழுதடைந்த வீடுகள் சீரமைக்கப்படும் கல்வி உதவித்தொகை எரிவாயு அடுப்பு உள்பட பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்தார். 

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் நலனுக்காக ரூ.317 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்து அறிவித்தார். அதேபோல் இலங்கை அகதிகள் முகாமை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்றழைக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எற்கெனவே, இலங்கைக்கு 7,500 கோடி ரூபாயை கடனாக கொடுத்து இந்தியா உதவி செய்தது. இருப்பினும், அங்கு ஒரு கிலோ அரிசி 500 ரூபாய் வரையும், சர்க்கரை 290 ரூபாய்க்கும், 400 கிராம் பால் பவுடர் 790 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் தேநீர் கடைகளில் ஒரு கோப்பை தேநீர்.100 ரூபாய்க்கும், பெட்ரோல் 254 ரூபாய்க்கும், டீசல் 214 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு பொதுமக்கள் முண்டியடிப்பதோடு, சில இடங்களில் மோதிக் கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறியதால், பெட்ரோல் பங்குகள் அனைத்தும் சேனைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் காகிதம் வாங்க பணம் இல்லாததால், தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், நிர்வாகத் திறமையின்மையே இதற்கு காரணம் என்றும், இந்தியா கொடுத்த நிதியுதவியையும், சரியான முறையில் இலங்கை அரசு செலவு செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளன.

இதனிடையே, இலங்கையில் விடுதலைப்புலிகள் எழுச்சிக்கு முன்பாக, சிங்களப் பேரினவாதிகள் இனப்போரை முடுக்கியதைத் தொடர்ந்து, தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்ததைப் போல, தற்போது பொருளாதார நெருக்கடி காரணங்களால், தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளனர். 

மன்னார் பகுதியில் இருந்து கைக்குழந்தையுடன் 6 பேர் தனுஷ்கோடிக்கு வந்த நிலையில், வவுனியா பகுதியிலிருந்து மேலும் 10 பேர் வந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கைக்கு அருகாமையில் உள்ள ராமேஸ்வரம் அடுத்த, மண்டபம்  அகதிகள் முகாமில் இலங்கையில் இருந்து வரும் அகதிகளை தங்க வைப்பதற்காக தற்காலிக வீடுகள் தயார் நிலைப்படுத்த அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,197.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.